திரும்பிப்பார்த்த போது கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. அதை விட கொஞ்சம் கோபமாகவும், வெட்கமாகவும் இருந்தது. ஏதோ ஒரு கனவு போல் இருந்தது. மறந்துவிட்ட வேகத்தில், சூழ்நிலையில் எழுதியவைகளாக இருக்கின்றன.
எல்லாரும் எழுதும் போது நாமும் எழுதுவோம் என்று ஆரம்பித்தது தான். முதலில் எங்கிருந்தாவது களவாடித் தான் போட ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. அதுவே பின்னர் பதிவாக மாற ஆரம்பித்தது. ஆனாலும் 98 பதிவுகளில் 50 பதிவுகளுக்கு மேல் திரும்பிப் படிக்கவே வெட்கமாக இருக்கிறது. அவைகளை அழித்து விடக்கூட எண்ணினேன். ஆனால் அடுத்தடுத்த பதிவுகளுக்கு வரிசை எண் இட்டுவிட்டதாலும், சரித்திரத்தில் இடம்பெற்ற (?) பதிவுகளாகி விட்டதாலும் அப்படியே விட்டு விட்டேன்.
சரி மீதி பதிவுகளில் ஏதாவது தேறுமா என்று பார்த்தால் அதில் கூட சந்தேகம் தான். ஆனாலும் தமிழ்மணத்தில் நுழைந்த 3 மாதமும் மகிழ்ச்சியாக கழிந்தது.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். இன்று திரும்பி சவுதியில் இருந்து இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நாள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தருணம் கொஞ்சம் அடிமனதில் சோகததையும் தருகிறது. சில குடும்ப சூழல்களினால் திரும்பி வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாலும், ஊரில் இணைய இணைப்பு குழப்பமான சூழலிலும் இருப்பதாலும் நண்பர்களைப் பிரியும் அந்த பள்ளி இறுதி நாள் அனுபவத்துடன் இதை எழுதுகிறேன்.
எனக்கு பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கும், என்னுடைய இணைய நண்பர்களுக்கும், என் பதிவை அவர்களுடைய கட்டுரைகளுக்கு இடையே சுட்டி கொடுத்தவர்களுக்கும், என்னிடம் ஆரோக்கியமாக சண்டையிட்டவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமாக எனக்கு பாசத்துடன் தங்களுக்கிடையே அரவணைத்து, ஆதரவளித்த எங்களுடைய பாசக்கார குடும்பத்தின் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். சில நேரங்களில் சர்ச்சையான சில விமர்சனப் பதிவுகளை இட்டதற்கும், அதனால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அவர்களிடம் எனது மன்னிப்பை வேண்டுகிறேன்.
நான் எழுதியவற்றில் தொடுப்பு கொடுக்க ஏதும் பதிப்பு தகுதியாக இல்லாதது போல் எனக்கு தோன்றினாலும் இந்த ஒரு பதிவுக்கு மட்டும் தொடுப்பு தருகிறேன்.
விடைபெறுவது
சகோதரி வித்யா கலைவாணி.
98. விடை பெறுகிறேன்...! இது கடைசிப் பதிவு!!.
Posted by
வித்யா கலைவாணி
at
45
comments
97. தமிழகத்தில் இணைய இணைப்பு - யாராவது உதவுங்க!!!!
இது தமிழகத்தில் இணையம் உபயோகிப்பவர்களுக்கானது. இன்னும் சில தினங்களில் நாங்கள் ஊருக்கு விடுமுறையில் செல்ல உள்ளோம். ஊரில் (பெரியகுளம்) தற்போது இணைய இணைப்பு இல்லை. என்வே ஊருக்கு போன பிறகு BSNL மூலம் தொலைபேசி இணைப்பும், அகலக்கற்றை ( Broadband) இணைப்பும் பெறலாம் என்று இருந்தோம். ஆனால் கடந்த வாரம் தினமலரில் வந்த செய்தி, அந்த ஐடியாவிற்கு மூடு விழா நடத்தி விட்டது.
அதாவது தொழில்நுட்பக் காரணங்களினால் எங்கள் ஊரில் அகலக்கற்றை இணைப்பு 6 மாதமாக வழங்கப்படாமல் உள்ளதாம். எனவே எங்களுக்கும் உடனடியாக கிடைக்க வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் இணைய இணைப்பு உள்ளவர்கள் BSNL தவிர்த்து மற்ற சேவைகள் இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
நேரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் பதிவிறக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால் நலம். என்ன திட்டம், மாதம் எவ்வளவு வரும் என்று தெரிவியுங்கள் . டயல் அப் பரிந்துரைக்க வேண்டாம். நம்ம வேகத்துக்கு டயல்அப் சரிவருவதில்லை. நண்பர்களே, உறவுகளே கொஞ்சம் உதவுங்கள்.
++++++++++++++++++%$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$%***********
ஒரு மொக்கை
மல்லுகளோடு மல்லுக்கு நிற்போம்.
இது மொக்கையா என்னன்னு தெரியலை. ஏஷியாநெட் தொலைக்காட்சியில் வந்த செய்தி. இரண்டு நாளுக்கு முன்னால் கேரள விமான நிலையத்தில் நம்ம சேட்டா சாஜி வந்திருக்கார். 34 வயதான அவர் தமாம் ( சவுதியில் ஒரு நகரம்) நகருக்கு டிரைவர் வேலைக்கு விசா கிடைத்து முதன் முறையாக வெளிநாடு செல்ல வந்துள்ளார். அதற்கு ஏஜண்ட்களுக்கு கிட்டதட்ட ஒன்றே கால் லட்சம் இந்திய ரூபாய் கொடுத்துள்ளார்.
விசா கிடைத்து டிக்கெட் கிடைத்த உடன் தனது குடும்பத்தினரிடல் விடை பெற்று வந்தா சாஜி மகிழ்ச்சியா ஏர்போர்ட்டில் நுழைந்துள்ளார். அவரது கடவுச்சீட்டைப் பார்த்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரது பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பி விட்டனர். என்ன காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
அவரது பிறந்த நாள் தான் அவரை திருப்பி அனுப்பியது. அவரது பிறந்த தேதி கடவுசீட்டில் 30-02-1973 என்று இருந்தது. பிப்ரவரியில் 30 நாள் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அதைவிடக் கொடுமை சாஜி சொன்னது. அவரது பள்ளி, ஓட்டுநர் உரிமம் அனைத்திலும் இந்த தேதிதான் உள்ளதாம். பள்ளி, அரசு இலாகாக்கள், கடவுச்சீட்டு இலாகா, விசா அடித்த சவுதி தூதரகம் எதுவும் இதைக் கவனிக்கவில்லை. பாவம் சாஜி.
இன்னும் சிலவற்றுடன் செய்தி மூலம்
Posted by
வித்யா கலைவாணி
at
23
comments
96. தமிழாசிரியையுடன் உரையாடல் - 2 மற்றும் ஒரு புதிய அறிமுகம்.
உரையாடலின் முதல் பகுதி பார்க்க
ஒரு தமிழாசிரியருடன் நடைபெற்ற சாட்டினை அப்படியே போன பதிவில் தர முயற்சி செய்தேன். அதன் தொடர்ச்சியாக இது இரண்டாவது பகுதி.இனி உரையாடல் தொடர்கிறது..............
தமிழாசிரியை : 35 ஆண்டு காலப் பழக்கம் அவ்வளவு எளிதில் மாறாது. கவிதை நடைச் சாயல் என் உரை நடைக்கு உண்டு - அதை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது.
வித்யா :சரிம்மா இத்துடன் நாம் முடித்துக் கொள்வோம். உங்களுடைய தமிழுக்கு எனது வந்தனங்கள்
தமிழாசிரியை : ஏன் பயந்துகிட்டுஓடறே
வித்யா : ஓட வில்லை
தமிழாசிரியை : பின்னே
வித்யா : நீங்கள் பழக்கத்தை மாற்ற முடியாது என்று தான் கூறுகிறீர்களே தவிர.. அதற்கு சரியான காரணம் கூற வில்லையே
தமிழாசிரியை : மாற்றத்திற்கு தேவை இன்னும் வரவில்லை
வித்யா : இளைய தலைமுறையினர் கூறுவதுதான் அதற்கு சான்று
தமிழாசிரியை : எத்தனை பேர் ?? விழுக்காடு அதிகமில்லையே !!
வித்யா : அப்படியென்றால் என்னைப் போன்றவர்களை உருவாக்க முடியாது
என்கிறீர்களா?
தமிழாசிரியை : முடியும் என்ற நம்பிக்கை உண்டு
வித்யா : அப்படியானால் எங்களுக்கு புரிய வேண்டுமே? புரிந்தால் தானே நீங்கள் சொல்வது போல வளர இயலும்.
தமிழாசிரியை : அடிக்கடி வந்து படி - கேள் - பழகப் பழகத் தமிழ் புரியும். ஒரு நல்ல செயலுக்காக நடை மாறாமல் இருப்பது நல்லது தான்
வித்யா : காலத்தின் கட்டாயம் என்று ஒன்று உள்ளதே? செய்தித்தாள்களில் பார்த்தால் புரியும்.
தமிழாசிரியை : கட்டாயம் என்பது அவரவர் கருத்தைப் பொறுத்தது.
வித்யா : இல்லை. இது தமிழின் கட்டாயம். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.
தமிழாசிரியை : செய்திதாள்களின் தரம் என்று ஒன்று இருக்கிறதல்லவா - தினமணிக்கும் தினமலருக்கும் வேறுபாடு இல்லையா?
வித்யா : இருக்கு. அது தான் காலத்தின் கட்டாயம் என்கிறேன்
தமிழாசிரியை : தினமணி தினமலர் போல மாற வேண்டுமென்று விரும்புகிறாயா ?
வித்யா : நான் அப்படி சொல்ல வில்லை. தினமணி சுதேசமித்ரனாகக் கூடாது என்று தான் சொல்கிறேன்
தமிழாசிரியை : அது காலத்தைப் பின்னோக்கி இட்டுச் செல்லாது
வித்யா : இல்லை நீங்கள் உங்கள் இடத்தை விட்டு வர மாட்டேன் என்கிறீர்கள் 35 ஆண்டுகளாக
தமிழாசிரியை : வரவேண்டும் எனச் சொல்கிறாயா?
வித்யா :கண்டிப்பா! தமிழ் கொலை செய்ய சொல்ல வில்லை. நீங்கள் எப்படி பேசுகிறீர்களோ அப்படி எழுதுங்கள்
தமிழாசிரியை : மொழி மரபில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கின்ற – இல்லை இல்லை - வாடிக்கொண்டிருக்கின்ற மொழியைப் பார்க்கும்போது உண்மை மறைந்து போய் விடுமோ என்ற உள்ளுணர்வு உறுத்துகின்றது.
வித்யா :இது வாடுதல் அல்ல. வளார்ச்சி தமிழ் சாகா வரம் பெற்றது.
தமிழாசிரியை : பேசுவது போல் எழுதுவது என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கு சரியே. ஆனால் நான் கருத்துப் பரிமாற்றம் செய்யவில்லை. கருத்துப் பதிவு தான் செய்கிறேன். புதுக்கவிதை மரபை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் நாம். அதில் கருத்து இருக்கிறது என்பது தான் அதன் வடிவம்.
வித்யா :அது போல தான். பேச்சுத் தமிழின் உருமாற்றம். அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்
தமிழாசிரியை : சங்க கால நடையில் யாரும் இப்போது எழுதுவதில்லை. என்னுடைய நடை மு.வ, வ.சுப.மா, பார்திதாசன், அறிஞர் அண்ணா, ஆகியோரின் மொழி நடையைப் படித்துப் படித்து சுவைத்ததால் வந்தது.
வித்யா : அதுவும் காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட உருமாற்றம் தானே. அதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.
தமிழாசிரியை : இந்தப் பேச்சுத்தமிழையே நான் படித்திருந்தால் பேசாமல் தமிழ் படிக்காமலேயே இருந்திருப்பேன்.
“இருந்தமிழே உன்னால் இருந்தேன்!!
இமையோ விருந்தமிழ்தம் வேண்டினும் வேண்டேன்”
என்ற நாவலர் தமிழைச் சுவைத்தும்
“தமிழே நீ ஒரு பூக்காடு அதில் நான் ஒரு தும்பி” என்ற அவர் பாவினைப் படித்தும் “சாதல் தமிழறிந்து சாதல் வேண்டும்
எந்தன் சாம்பலுமே தமிழ் மணந்து வேதல் வேண்டும்”
என்ற பாரதி தாசனைச் சுவைத்தும்
“தனிமைச் சுவையுடைய சொல்லை
எங்கள் தமிழினும் வேறெங்கும் கண்டதில்லை”
என்ற பாரதியை பாவால் பார்த்தும் வந்ததே என் தமிழ் நடை - அது எப்படி மாறும்?
வித்யா : சரி இறுதியாக என்னதான் சொல்கிறீர்கள்.
தமிழாசிரியை : ஒவ்வொரு கட்டத்திலும் மொழியானது தனது வளர்ச்சியை நோக்கி செல்லும். ஆனால் தற்காலத்தில் இருப்பது தான் சரியானது என்று நினைத்து விடக்கூடாது. பழையவர்கள் அதில் இருந்து சரியானவைகளைத் தேர்ந்தெடுத்து புதியவர்களுக்கு தருகின்றனர். எப்படி சிறு குழந்தைக்கு பெற்றோர் எது தேவையோ, அதைத் தேர்ந்தெடுத்து கொடுக்கின்றனர். அதே போல் தான் இதுவும். உங்களுக்கு சந்தேகங்கள் வரும் போது எங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இப்போது எழுதுபவர்களில் பலருக்கு ல, ள, ழ போன்றவற்றிற்கு வித்தியாசம் தெரிவதில்லை. அதே போல் தாம் ன, ண, மற்றும் ர ற போன்றவை. இவைகளை எங்கள் எழுத்துகளைப் படிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக திருந்திவிடும். தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் அனைத்தும் சுலபம் தானே.
வித்யா : அம்மா உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் செல்லும் வழியை நீங்கள் கண்காணித்துக் கொண்டே இருங்கள். நாங்கள் தவறு செய்யும் போது கண்டியுங்கள். அதை சிரமேற்கொண்டு ஏற்றுக் கொள்கிறோம்.
பின்குறிப்பு
அந்த தமிழாசிரியை என்னுடைய தாய்க்குச் சமமான செல்வி ஷங்கர் என்ற பெயரில் எழுதி வருபவர். தமிழ்மண மக்கள் அறிந்த சீனா அப்பாவின் மறுபாதியானவர். ( துணைவியாருக்கு மறுபாதி என்று புது பெயர் கொடுத்தது சீனா அப்பா தான்) அவரது தமிழமுதை சுவைக்க வாருங்கள்.
எண்ணச்சிறகு
பட்டறிவும் பாடமும்
கேட்டதில் பிடித்தவை
2. நாங்கள் இருக்கும் ரியாத்தில் இருந்து புதிதாக தமிழ்மணத்திற்கு அறிமுகமாகி இருக்கும் எனது புதிய சொந்தம் சகோதரி பாசமலரும் தனது தமிழ் அறிவை தனது பதிவுகளில் பறைசாட்டுகிறார். என்னுடைய முதல் பதிவில் நான் கூறிய கருத்துகளால் கோபமடைந்து ஒரு கவிதை கூட அவரது பதிவில் எழுதி விட்டார். பாருங்கள்.
“சிதையில் நீ போகாமல்
சீராய்க் காக்கும்
மெய்காப்பாளர்
திருப்பணி பெற்றுத்
துறை தோறும்
துலங்குவாய் தமிழே!”
3. இவர்கள் இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by
வித்யா கலைவாணி
at
14
comments
95. தமிழ் மொழி நடை - தமிழாசிரியையுடன் ஒரு உரையாடல்
தமிழாசிரியையுடன் ஒரு தமிழ் கலந்துரையாடல்
சமீபத்தில் ஒரு தமிழாசிரியையுடன் சாட்டில் சாதாரணமாகப் பேசியது ஒரு விவாததை நோக்கி இழுத்துச் சென்றது. அந்த தமிழாசிரியை தமிழை தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் . பல ஆண்டுகளாக தமிழாசிரியையாக பணி செய்து ஓய்வு பெற்றவர் . அந்த உரையாடலை முடிந்த அளவு சீர்செய்து இங்கு தருகிறேன் .
வித்யா : வணக்கம்மா
தமிழாசிரியை : வணக்கம்
வித்யா : அம்மா நல்லா இருக்கீங்களா?
தமிழாசிரியை : நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?
வித்யா : ம் உங்க ஆசியில் நல்லா இருக்கேன்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;
**************
&&&&&&&&&&&&
வித்யா : நல்ல அனுபவங்களைத் தருகிறீர்கள். வரவேற்கிறோம். ஆனா நாங்க புது தலைமுறை ஆளுங்க. அதனால எங்களுக்கு புரியும்படி எழுதலாமே?.
தமிழாசிரியர் : மொழி நடை எல்லாம் அவரவர் இயல்பு. புரிந்து கொள்ள முயற்சி செய்க.
வித்யா : இன்றைய மக்கள் புரிந்து கொள்ளும் நடைமுறைத் தமிழில் நீங்க ஏன் எழுதக்கூடாது?
தமிழாசிரியை : நடைமுறைத் தமிழில் எழுதினால் தமிழ் வளர்ச்சி என்பது தொலைக்காட்சித் தமிழ் போல் ஆகிவிடும்
வித்யா : படிக்க எங்களுக்கு கடினமா இருக்கே
தமிழாசிரியை : படிக்கப் படிக்க பழகி விடும் - இதை நான் நடைமுறையில் செய்முறையாக கண்டுள்ளேன்
வித்யா : நீங்கள் எழுதுவது கிட்டதட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிய தமிழா இருக்கே? அது எப்படி மீண்டும் வரும்? காலத்துக்கு ஏற்றார் போல் தமிழும் மாறுகிறது. நாமும் மாற வேண்டும். இது தானே நியாயம்.
தமிழாசிரியை : தமிழ் அறிந்தவர்கள் இத்தகைய நடையைத்தான் பயன்படுத்துவார்கள். பேச்சுத் தமிழும் பொதுத் தமிழும் அறிந்தவர்களே நடைமுறைத் தமிழை பயன் படுத்துவார்கள்
வித்யா : தமிழ் அறிந்தவர்கள் எனபது யாரை என்று விளங்கவில்லை. அதை கொஞ்சம் விளக்க முடியமா? அதற்கு ஒரு எல்லை வேணுமே?
தமிழாசிரியை : தமிழ் இலக்கியங்களை அறிந்தவர்கள்
வித்யா : அப்படியானால் இலக்கியம் அறிந்தவர்கள் எதை, எந்த முறையில் எழுதுகிறார்களோ அது தான் தூய தமிழா?
தமிழாசிரியை : தூய தமிழ் என்பதில்லை - நடை உயர்ந்த தமிழ் என்பது அது. ஏன் ஆங்கிலத்தில் high language என்பதை ஏற்றுக்கொள்கிற நாம் இதை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது
வித்யா : சரி. உங்களது கருத்தின் அடிப்படையில் ஏதாவது தமிழறிந்த அறிஞர் யாரையாவது கூறுங்கள்?
தமிழாசிரியை : வைரமுத்துவின் பாடல் அடிகளுக்கும், மற்ற கவிஞர்களின் பாடல் அடிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லையா?
வித்யா : அப்படியானால் வைரமுத்துவின் மொழி நடை சிறந்த நடைகளில் ஒன்று. சரி தானா?
தமிழாசிரியை : காலத்தோடு ஒட்டிய நடை மிகச் சரியே
வித்யா : அவரும் காலத்திற்கு ஏற்றார் போல் எளிய மொழி நடையில் சினிமாவிற்கு கவிதை எழுதுகிறாரே? டப்பங்குத்து பாடல் உட்பட
தமிழாசிரியை : அது - சினிமாவிற்கு எழுதுவது தொழில் -
வித்யா : அப்படியானல் வருமானத்திற்கு தமிழை மாற்றிக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
தமிழாசிரியை : முடியாது - வருமானத்துக்கக தமிழை மாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வாழ வேண்டும் என்றால் ஒரு வழியைத் தேடித்தானே ஆக வேண்டும்
வித்யா : சரி அதே போல் நீங்கள் விரும்பும் இலக்கியம் ஒன்றையும் கூறூங்கள்
தமிழாசிரியை : தமிழ் இலக்கியத்தில் ஒன்றல்ல - ஓராயிரம் இலக்கியங்கள் உண்டு. மு.வ வின் மொழி நடை, தொல்காப்பியத்தின் உரை விளக்கம், சிலம்பின் சீரிய நடை, இவற்றை எல்லாம் படிக்கும் போது நம்மை அறியாமலெயே நன்நடை வந்து விடும்
வித்யா : சரி அதை விடுங்கள். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் பற்றி கூறினீர்கள்
தமிழாசிரியை : ஆமாம்
வித்யா :
'நிலப் பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர்
உடைப்பெயர் பண்பு கொள் பெயரே' இது தெரிகிறதா?
தமிழாசிரியை : ஆம் இது தொல்காப்பியம்
தமிழாசிரியை : பெயர் வினை பண்புச் சொற்கள் இலக்கண அடிப்படையில் உள்ளன. என்பதற்கு உரிய விதி இது. தொல் காப்பியம் / நன்னூல் - இவற்றை விளக்கும்
வித்யா : சரி
வித்யா : அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
என்ன பெயரும் அத் திணையவ்வே.
தமிழாசிரியை : தொல்காப்பியம் தான்
வித்யா : இதுவும் தொல்காப்பியம் தான், எனக்கு இது புரியவே இல்லை. அதாவது விளங்கவில்லை
தமிழாசிரியை : அது சரி - அதான் நானே கூறி விட்டேனே. இது செய்யுள் நடை. உனக்கு புரியாது.
வித்யா : நீங்க ஏன் இந்த தமிழ் மொழி நடையில் எழுதுவதில்லை.?
தமிழாசிரியை : காலம் சென்ற தமிழுக்கும் காலத்தின் தமிழுக்கும் வேறுபாடு இல்லையா ?? இப்படியே போனால் எதிர்காலத் தமிழ் மறைந்து விடும்
வித்யா : இதைத் தான் நானும் சொல்கிறேன்
தமிழாசிரியை : தற்போதைய தமிழ் நடை - பேச்சு நடை - எழுத்து நடை என்பது வேறுபாடில்லாமல் வளர்ந்து வருகிறது. வளரும் தலை முறையினருக்கு இது மறந்து போனால் தமிழ் மறந்து போகும்
வித்யா : நீங்கள் எழுதும் தமிழ் எங்களைப் போன்ற புதிய தலைமுறைக்கு புரிய கடினமாக இருக்கிறது. எனவே உங்கள் அனுபவங்களை எங்களுக்கு புரிந்த தமிழில் சொன்னால் சுலபமாக புரியுமல்லவா ?
தமிழாசிரியை : பல முறை படித்தால் நடை பழகி விடும். பேச்சுத் தமிழில் எழுதுவது என்பது என்னால் இயலாத ஒன்று.
:::::::::::::
:::::::::::::::::
வித்யா : வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் தெரியுமா?
தமிழாசிரியை : கருவாச்சி காவியம் தானே?
வித்யா : ஆமாம். படித்துள்ளீர்களா? அதன் மொழி நடை தெரியுமா?
தமிழாசிரியை : வார இதழ்களில் குறுங்கதைகளைப் படிப்பது என் இயல்பல்ல. அது வட்டாரத் தமிழ். வைர முத்துவின் 'சிகரங்களை நோக்கி' என்ற கவிதை நூல் அவரது முதற் கவிதைப் படைப்பாகும். கருவாச்சி காவியம் வட்டாரத் தமிழை அடிப்படையாகக் கொண்டது. ஆஸ்திரேலியாவில் இருந்த தன் மகனுக்கு வைர முத்து எழுதிய முதல் மடல் அதே வார இதழில் வெளி வந்தது. அது அவரது உயர்ந்த தமிழ் நடையில் அமைந்தது
வித்யா : அதை எழுதிய வைரமுத்து அதை சரிகாணும் போது நீங்களும் அது போல தமிழ் உலக வட்டாரத்திற்கு தெரிந்த தமிழில் எழுதலாமே?
தமிழாசிரியை : என்னிடத்திலே ஆண்டுக்கு அறுனூறு பேர் பேச்சுத் தமிழும் தெரியாமல் எழுத்துத் தமிழும் தெரியாமல் சென்னைத் தமிழோடு வந்தனர். அவர்களை எல்லாம் திருத்தி தமிழை அறியச் செய்த என் நோக்கம் தான் இந்தத் தமிழ் நடையின் வளர்ச்சி
வித்யா : உங்களுடைய தமிழ் பற்றை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அடுத்தடுத்த தமிழ் நடைக்கு செல்வது தானே நியாயம்
தமிழாசிரியை : எனது நடை என் விருப்பத்திற்காக எழுதப்பட்ட நடை. நான் எதையும் எவருக்ககாவும் எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டேன். இது என் இயல்பு
வித்யா : அம்மா கோபமாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும். இது சாதாரணமான உரையாடல் தான்
தமிழாசிரியை : என்னுடைய மொழி நடையே இத்தகைய நடை தான். கோப நடையே வேறு
வித்யா : ஆகா கோப நடை வேறு இருக்கா பயமுறுத்துகிறீர்களா?
தமிழாசிரியை : இல்லை இல்லை –
வித்யா : என் தமிழ் நடையை எப்படி உணர்கிறீர்கள்?
தமிழாசிரியை : தமிழ் கொஞ்சம் அறிந்தவர் என்று தெரிகிறது?
வித்யா : நான் கேட்பதும் இது தான். நாங்கள் எழுதுவது போன்ற மொழி நடையில் எழுதுங்கள் என்று
தமிழாசிரியை : எனக்கு அத்தகைய நடை பிடிப்பதில்லை
வித்யா : தங்களை சென்னை மொழி வழக்கில் எழுதுங்கள் என்று சொல்ல வில்லை. நாங்கள் எழுதுவது போல் இன்று இருப்பது போல் எழுதலாமே?
தமிழாசிரியை : 35 ஆண்டு காலப் பழக்கம் அவ்வளவு எளிதில் மாறாது.
வித்யா : //எனக்கு அத்தகைய நடை பிடிப்பதில்லை// இதை உங்களைப் போன்ற திறமைசாலிகள் கூறக்கூடாது
தமிழாசிரியை : ஏன் என்றால் வளரும் தலை முறையினர் அது தான் தமிழ் என்று நினைத்து விடுகிறார்கள். வளர்ந்தவர்களைப் பற்றி கவலை இல்லை.
வித்யா : விறகு அடுப்பில் இருந்து எரிவாயு அடுப்புக்கு சுலபமாக மாறினோமே! அது போல காலத்தின் தேவைக்கு மாற ஏன் தயக்கம்?
தமிழாசிரியை : வாழ்க்கை பழக்க வழக்க முறை என்பது வேறு. மொழி என்பது வேறு, அறிவியலால் வாழ்க்கை முறை மாறும். மொழி நடை மாறாது. அறிவியல் கருத்துகள் மொழியில் இடம் பெறும்.
வித்யா : மொழி வழக்கம் மாறி உள்ளதே
தமிழாசிரியை : என்ன சொல்ல வருகிறாய்
வித்யா : 1950 களில் பேசிய எழுதிய தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?
தமிழாசிரியை : அக்காலத் தமிழ் பாடல் வடிவிலேயே இடம் பெற்றது. இன்று உரை நடையிலேயே கருத்து உணர்த்தப் படிகிறது. புதுக் கவிதை மரபை ஏற்றுக் கொள்கிற நாம் உரைநடையிலும் ஒரு அழகிய வடிவை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
வித்யா : பெரியார், அண்ணா பேசிய தமிழுக்கும் இன்றைய கலைஞர் பேசும் தமிழுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது? அக்காலத்தில் வாழ்ந்த கலைஞர் கூட தனது தமிழை மாற்றி விட்டாரே
தமிழாசிரியை : கலைஞர் மாற வில்லை. அவர் பேச்சில் பிறரைக் காட்டிலும் இலக்கிய நடை ஒளிரும். பிறர் வந்து சென்றேன் என்பதை அவர் வந்தேன் கண்டேன் சென்றேன் என்பார்.
வித்யா : அவரது இலக்கிய நடை மெருகேறுவதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால்
தமிழாசிரியை : ஆனால் ....
வித்யா : 1960 களில் பேசியது போல போன்று இன்று பேசுவதில்லையே
தமிழாசிரியை : மெருகேறி இருக்கிறது - காலத்தின் கட்டாயம்.
வித்யா : அதே காலத்தின் கட்டாயம் தான் நான் சொல்வதும், கலைஞர் 60 களில் பேசியது போல் இன்று பேசினால் ஓட்டு விழாது. கவியரங்கங்களில் மட்டும் தான் உயர்ந்த நடையில் பேசுவார்
தமிழாசிரியை : இல்லை இல்லை. உன்னுடைய ஒரு பதிவைப் படித்து விட்டு நாளை அதைப் பற்றி பேசுகிறேன். இப்போது தொடர்க. அரசியல் தொழில் கலைஞருக்கு. தொழில் வேறு - மொழி வேறு.
வித்யா : ஆகா. அப்ப என் பதிவுல குறை கண்டுபிடிச்சு வந்து நாளைக்கு கும்மியா?
தமிழாசிரியை : ஆமா, பின்னே
வித்யா : அம்மா என்னுடைய தமிழ் சிறந்தது என்று நான் கூறவில்லை
தமிழாசிரியை : நானும் கூற வில்லை மகளே
தமிழாசிரியை : கருத்தினைப் பொறுத்து நடை மாறும். பாப்பாவைப் பார்த்து வா கண்ணா வா என்றுதான் கூற முடியும். வாருங்கள் வாருங்கள் என்றா சொல்ல முடியும்
வித்யா : மொழி இலக்கணத்தை மாற்ற நான் அனுமதியேன், மொழி நடையைத் தான் கூறுகிறேன்
தமிழாசிரியை : மொழி வரலாறே அனுமதித்திருக்கிறது. தவழுகின்ற குழந்தை எழுந்து நடப்பதற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதைப் போல என்று மு.வ மொழி வளர்ச்சியைக் கூறுகிறார்.
வித்யா : //கண்ணா வா// என்பதை வாம்மா செல்லம் எனபது போல கூறலாமே எனபது தான் என் கருத்து
தமிழாசிரியை : 35 ஆண்டு காலப் பழக்கம் அவ்வளவு எளிதில் மாறாது. கவிதை நடைச் சாயல் என் உரை நடைக்கு உண்டு - அதை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது.
வித்யா : சரிம்மா இத்துடன் நாம் முடித்துக் கொள்வோம். உங்களுடைய தமிழுக்கு எனது வந்தனங்கள்
தமிழாசிரியை : ஏன் பயந்துகிட்டு ஓடறே ?
=========
பின்குறிப்பு:
எழுத்துப் பிழை இருந்தால் அது என் தவறே. இந்த உரையாடல் எந்த முன் தயாரிப்பும் இன்றி நடந்தது.
Posted by
வித்யா கலைவாணி
at
10
comments
94. டாலரில் எண்ணைய் விற்பனையை நிறுத்த கோரிக்கை.
19 நவம்பர் 2007 அன்று இங்கு ரியாத் மாநகரில் OPEC எனப்படும் (Organization of the Petroleum Exporting Countries ) எண்ணைய் எடுக்கும் நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஈரானின் அதிபர் அஹமத்திந்நிஜாத் எண்ணைய் விற்பனை டாலரில் இருப்பதை மாற்றி வேறு கரன்ஸியில் செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் கூறும் போது " நாம் தரும் எண்ணைய்க்கு மதிப்பில்லாத காகிதங்களைப் பெறுவதை நிறுத்த வேண்டுமென்றும், டாலரின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி மேலும் சென்று கொண்டிருக்கிறது." என்றார்.
அந்நிஜாத்தின் வேண்டுகோளை வெனிசுலா அதிபரும், மற்றும் ஈக்குவடார் நாட்டின் பிரதிநிதகளும் ஆதரித்தனர். வளைகுடாவில் உள்ள பல நாடுகள் இதை ஆதரிக்கவில்லை. ஆனாலும் எண்ணையின் விலை பாரலுக்கு 100 டாலரை நெருங்குவதையும் அந்நாடுகள் கவலையுடன் குறிப்பிட்டன. இதற்கு டாலரின் வீழ்ச்சியே காரணம்.
இந்நிலையில் வரும் டிசம்பரில் அபுதாபியில் நடைபெறும் OPEC நாடுகளின் நிதியமைச்சர்களின் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. அவ்வாறு அந்த விவாதத்தில் டாலரிலிருந்து வேறு கரன்ஸிக்கு மாற முடிவெடுத்தால் அது ஆசியக் கண்டத்தில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வி்த்திடும் என நம்பலாம்.
மேலும் புவி வெப்பமடைதலில் இருந்து உலகைக் காக்க அனைவரும் இணைந்து பணியாற்றவும், அதற்கான நிதி ஒதுக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இது தொடர்பான பழைய பதிவு ஒன்று பார்வைக்கு
http://kalavani.blogspot.com/2007/11/81_01.html
http://satrumun.com/?p=3575
செய்தி மூலம்
அல் ஜஸீரா
அரப் நியூஸ்
Posted by
வித்யா கலைவாணி
at
8
comments
Labels: வளைகுடா பகுதி
93. நான் ஒரு கோடீஸ்வரி!!!!!!!! - நம்புங்க எல்லாரும்
தலைப்பை பார்த்து விட்டு கலைவாணியிடம் ஏதாவது (திருப்பித் தாராக் )கடன் வாங்கலாம் என்று வருபவர்கள் உடனடியாக பின்னூட்டத்தில் தங்களுக்கு தேவையான தொகையை எழுதவும். இப்பொழுது என்னிடம் பணம் இல்லை. ஆனால் விரைவில் என்னை எப்படியாவது கோடீஸ்வரியாக்க வேண்டுமென்று சிலர் கங்கனம் கட்டிக் கொண்டு அலைகின்றனர். கதை இதுதான். என்னோட யாஹூ மெயில் பெட்டியைத் திறந்தா தினமும் எப்படியாவது இரண்டு மூன்று மின்னஞ்சல் இருக்கும். அதில் சில மின்னஞ்சல்கள் என்னை கோடீஸ்வரியாக்கப் பார்க்கின்றன. சில சின்ன வியாபார பேரங்களுக்கு உட்பட்டால் பல மில்லியன், பில்லியன் டாலர் தருவதாக வாக்களிக்கின்றன். அதுவும் இந்திய ரூபாயில் இல்லாமல் டாலரில் இருப்பதால் என்னை போன்ற இளகிய மனதுடையவர்கள் அதை பார்த்து ஆனந்தம் அடைய வேண்டி இருக்கிறது. எனவே அந்த வியாபாரங்களை சீக்கிரம் முடித்து நான் கோடிஸ்வரியானதும் உங்களுக்கு தேவ்வையான தொகை உடனடியாக வழங்கப்படும். சில சாம்பிள் காட்டுகிறேன்.
நீங்களே இந்த டீலிங்கில் நேரடியாக இறங்கி அதள பாதாளத்தில் விழ..... மன்னிக்கவும்.... பணக்காரராக வேண்டுமென்றாலும் அதற்கான உதவிகள் செய்யப்படும்.
Sample : 1
However, we have decided to transfer this sum of money, Thirty Seven Million Us dollars ($37million usa Dollars) out of this Country for disbursement. Hence, we seek for a reliable,honest and not greedy foreign partner whom we shall use his or her account for transferring the fund. And we agreed that the account owner shall benefit 30% of the total amount of money, 65% is for us here, and 5% will be used for miscellaneous expenses during the transfer.
Sample : 2
Kingdom National Lottery Program held on the 12th of Nov 2007. Your
e-mail address attached to ticket number 20511465463-7644 with
serialnumber S/N-00168 drew lucky numbers 19,23,24,25,38,39,Bonus32,
which
consequently won in the 2ND category, you have therefore been approved
for
a lump sum pay of £1,000,000.00(British Pounds).
CONGRATULATIONS!!
Sample : 3
//WE DECIDED TO SEEK WAYS THROUGH WHICH WE CAN TRANSFER THIS MONEY OUT OF THE BANK AND OUT OF THE COUNTRY TOO. THE TOTAL AMOUNT IN THE ACCOUNT IS TEN MILLION FIVE HUNDRED THUSAND DOLLARS (USD 10,500,000.00).I AND MY PARTNERS HAVE DECIDED TO GIVE AWAY THIRTY % (30%) TO YOU FOR YOUR ASSISTANCE AND TEN (10%) FOR ANY EXPENSES THAT MIGHT ARISE DURING THE TRANSACTION OF THIS TRANSFER.//
Sample : 4
CONGRATULATIONS
You have the winning sum of GBP 950,000.00 from Microsoft Promotion
Board® because you are a Microsoft Windows and Internet user and Microsoft
software subcriber so you have automatically won yourself Nine
Hundred and Fifty Thousand Pounds !
இது போல் இன்னும் பல விதமான வியாபார பேரங்கள் தினமும் வந்து எப்படியாவது முகேஷ் அம்பானிக்கு விட என்னை பணக்காரியாக்க முயற்சி நடக்கிறது. எதை ஏற்றுக் கொள்வது எதை விடுவது எனத் தெரியாமல் திணறி வருகிறேன். எல்லாருக்கும் அக்கா பணக்காரியாவது சந்தோசம் தான?
மக்கா! என்னத்த சொல்லி என்னத்த செய்ய.
பின் குறிப்புகள்
1. என்னை மொக்கை பதிவர்கள் சங்கத்தில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, சீரியஸ் லிஸ்ட்டில் சேர்க்க முயற்சி நடப்பதாக வந்த தகவலால் இந்த மொக்கை.
2. அந்த தகவலை அடுத்து எனக்கு ஆதரவாக டீக்குடிப்பு போராட்டம்........ மன்னிக்கவும்.. தீக்குளிக்க முன் வந்த ஆயில்யன் உள்ளிட்ட ஸ்ரேயா கோஸல் ரசிகர் மன்றத் தற்கொலைப்படைக்கு நன்றிகள்.
2. இந்த பதிவு மொக்கை இல்லவே இல்லை. இதிலும் கருத்து அதாங்க மெசெஜ் இருக்குனு சொல்பவர்களுக்கு கண்டிப்பாக பணம் கடன் கிடையாது.
Posted by
வித்யா கலைவாணி
at
37
comments
92. அமெரிக்காவின் வண்டவாளம் - அமரபாரதிக்கு பதில்கள்
என்னுடைய 91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை வது பதிவில் அமெரிக்காவிற்கு ஆதரவாக நியூயார்க்கைச் சேர்ந்த அமரபாரதி என்ற சகோதரர் பின்னூட்டம் போட்டிருந்தார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், அவரைப் போல் அமெரிக்காவின் அனைத்து கொடுமைகளுக்கும் ஆதரவு அளிக்கும் சிலர் இருப்பதால் அவருடைய 12 கேள்விகளுக்கு இங்கு பதில் தருகிறேன். ஒரு மனிதனுக்குரிய மனநிலையுடன் இதை படியுங்கள். 91 வது பதிவு அமெரிக்காவை வைத்து மட்டுமே எழுதப்பட்டது.எனவே அதற்கு மட்டுமே பதில்.
அப்பாவி மக்களை கொல்லும் ரஷ்யா, இனவெறி ஹோவர்ட், பர்மா, இலங்கை, உள்நாட்டு சண்டைகள் உக்கிரத்தில் இருக்கும் ஆப்பிரிக்கா கண்டம், அவர்களின் சொகுசான அதிபர்கள், அமெரிக்கா பிடியில் தவிக்கும் தென் அமெரிக்கா நாடுகள், அமெரிக்காவின் வால் பிடிக்கும் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அரசியலின் கையாலாகாதத்தனம், இப்படி எவ்வளவோ விஷயங்களை இன்னும் கொண்டு வரலாம்.
இனி அவரது கேள்விகளும் எனது பதில்களும்
//1. அணுகுண்டு போடவில்லைடென்றால் ஜப்பானியர்களை அவர்கள் செய்த கொடூரங்களை அடக்கி இருக்க முடியாது. ஆசியா முழுவதும் அதகளம் செய்தும் அடங்காத ஜப்பான் பேர்ல் கார்பர் வரை தன் வாலை நீட்டிய பின்பே அணுகுண்டு போடப்பட்டது. ஆனால் இன்றளவும் அமெரிக்க இராணுவமே ஜப்பானைப்பாதுகாக்கிறது.//
ஜப்பானின் போர் தவறானது என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் அதற்கும் ஹிரோஷிமா, நாகசாகியில் அப்பாவி மக்களைக் கொன்றதற்கும் என்ன தொடர்பு? போரை நிறுத்த அதுதான் வழியா?. ஒரு அரசு போர் செய்தால் அந்த நாட்டின் அப்பாவி மக்கள் மீது அணுகுண்டு வீசலாமா? ஆப்கனில், ஈராக்கில் அமெரிக்கா போர் செய்கிறது என்பதற்காக நியூயார்க்கின் மீது அணுகுண்டு வீசலாமா?
வரலாறு தெரியாமல் சொல்கிறீர்கள். 1945ல் அணுகுண்டு வீசப்பட்டதற்குரிய காரணம் பியர்ல் கார்பரில் ஜப்பான் செய்த தாக்குதல் தான். அது நடந்த ஆண்டு 1941.பியர்ல் கார்பர் தாக்கப்பட்டதற்குப் பிறகு அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்ட் செனட்டில் அதிகமான நிதியை அணுஆயுதம் செய்ய ஒதுக்கினார். ஜப்பானில் போடுவதற்காகவே அந்த அணுஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை விட ஹிட்லர் அதிகமாக அதகளம் செய்தார். அங்கு ஏன் அணுகுண்டு போடப்படவில்லை?.(போட்டிருக்க வேண்டுமென்று சொல்லவில்லை.) ஜப்பான் பிரிட்டீஸ் கலானிக்குள் நுழையும் போது அதைக் காரணமாகக் காட்டி தான் அமெரிக்கா தாக்கியது. ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்டது ஒரு பழிவாங்கும் வெறியின் உச்சகட்டமே ஒழிய மக்களைக் காக்க வேண்டுமென்று அல்ல. ஹிரோஷிமாவில் குண்டு போட்டு உலகமே மானுடத்தின் அழிவைப் பார்த்து செய்வதறியாது திகைத்த அந்த வேளையில், பொறுமையாக எல்லாவற்றையும் ரசித்துவிட்டு, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாகசாகியில் குண்டு வீசியதற்கும் ஆதரவளிக்கிறீர்களா?
ஜப்பானை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா அடிமை நாடாக வைத்திருப்பது தான் அனைவருக்கும் தெரியுமே? அது பாதுகாப்பு இல்லை. காலனி.
// 2. 1959 வியட்னாமைப்பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இன்று இலங்கையில் போடப்படும் குண்டுகளப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?//
// 7. இது தொழிலல்//
என்னுடைய பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். உலகில் உண்மையில் அமைதியை நாடும் நாடாக இருந்தால் அமெரிக்கா இதற்கும் முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் மக்களைப் படுகொலை செய்ய இலங்கைக்கு ஆயுதங்களை தனது செல்லப்பிள்ளைகள் இஸ்ரேல், பாகிஸ்தான் வழியாக விற்று விட்டு பின் இலங்கையை போரை நிறுத்து என்று சொல்ல அமெரிக்காவிற்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?.
// 3. ரஷ்யாவின் வறுமையும் கம்யூனிச கிறுக்குத்தனமும் தான் அதை உடைத்தது. அமெரிக்காவின் பங்கு மிக சிறிதே.//
கம்யூனிஷத்தைப் பற்றி வேறு ஒரு சந்தர்பத்தில் பார்ப்போம். இரும்புத்திரை நாடான சோவியத் ரஷ்யாவில் சி.ஐ.ஏ வின் முகவர்கள் ஊடுறுவி இருந்தனர். அவர்கள் செய்த அரசியல் தகிடுதத்தங்களும் அதற்கு காரணம். ரஷ்யா ஆப்கனில் ஆக்கிரமிப்பு செய்து தனது பொம்மை அரசை வைத்திருந்தது. அப்போது ஆப்கனில் தங்கி ஆயுதப் போர் புரிந்த ஒசாமா பின் லேடன் போன்றவர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்? கிட்டதட்ட 1.4 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பிற்கு ஆயுதங்களை இலவசமாக சப்ளை செய்தது யார்?
இதை இன்னும் விவரமாக சொல்கிறேன். 1975 க்குப் பிறகு அமெரிக்க சோவியத்தின் பனிப்போர் உச்சத்தை அடைந்தது. ரஷ்யாவின் நாலா புறங்களிலும் இருந்து அமெரிக்கா தனது சதி வலைகளை விரித்து வைத்தது. அதில் ஒரு வலை தான் ஆப்கன். அப்போது ரஷ்யா ஆப்கனில் ஆதிக்கம் செலுத்தியது. எனவே அப்போது அங்கு கொரில்லா போர் புரிந்த முஜாஹிதீன்களுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கியது. 1979 களில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் பல உதவிகளை வழங்கினார். 1981 ல் அதிபரான ரொனால்ட் ரீகன் தனது புலனாய்வுப் படையான CIA மூலம் சுமார் 600 மில்லியன் டாலருக்கு உதவி வழங்கினார். இதற்கு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக் உபயோகப்படுத்தப்பட்டார். CIA தலைவர் Gust Avrakotos நேரடிக் கண்காணிப்பில் சீனாவில் இருந்து ஆயுதங்கள் வாங்கி முஹாஜிதீன்களுக்கு தரப்பட்டன. ஹோரின்கோ வகை 69RPG ராக்கெட் லாஞ்சர்கள் சீனாவில் இருந்தும், எகிப்தில் இருந்து ரைபிள்களும் வாங்கப்பட்டன. அமெரிக்கா தயாரிப்பான தரையில் இருந்து விமானங்களைத் தாக்கும் FIM-92 Stinger anti-aircraft missile கள் தருவிக்கப்பட்டு வழங்கப்பட்டன. பாகிஸ்தான் வழியாக முஜாஹிதீன்களுக்கு CIA பயிற்சியும் தரப்பட்டது. அந்த போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ரஷ்யாவிற்கு இறங்கு முகமே இருந்தது. இன்னும் தகவல் தேவைப்பட்டால் கார்டரிடம் பாதுகாப்பு தலைவராக வேலை பார்த்த Zbigniew Brzezinski எழுதிய "From the Shadows" என்ற புத்தகத்தைப் படியுங்கள்.
// 4. 21ஆம் நூற்றான்டில் 2002ல் கஜராத்தில் மோடி நடத்திய வெறியாட்டத்தை விடவா? தெகல்காவைப் படித்தீர்களா?//
உண்மையான மனித உணர்வு கொண்ட எந்த மனிதனும் அதை ஆதரிக்க மாட்டான். என்னுடைய உச்சபட்ச கண்டனம் அந்த கொடூரத்திற்கு. இதே கண்டனம் தான் பிலிப்பைனில் அமெரிக்கா நடத்திய வெறி ஆட்டத்திற்கும்.
//5. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த போது நீலிக்கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை. அந்த கடாவின் பல்லைப்பிடுங்கி இருக்கிறது. இரட்டை கோபுர தகர்ப்பிற்கு முன்னால் ஒசாமா ஆப்கானிஸ்தானின் அரசன். இன்று எங்கே அவன்?//
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒசாமாவை மதத்தின் பெயரால் 80 களில் மூளைச் சலவை செய்தது அமெரிக்கா தான். அந்த மூளைச்சலவை தான் தனக்கு எதிராக திரும்பியதை பின்னர் அமெரிக்கா உணர்ந்த போது, காலம் கடந்து விட்டிருந்தது. ஒசாமாவை அழித்து விட்டதாக சொல்லலாம். ஆனால் அவன் விதைத்த விதைகளை என்ன செய்வது? ஒசாமாவுக்கு முன் சுதந்திரமாக உலாவிய அமெரிக்கா மக்கள் இன்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அலைகின்றனர். அதுவும் செப்டம்பர் 11 என்றால் அதோ கதிதான். ஆனால் ஒசாமா அன்று போலவே இன்றும் காடு மேடு என்று ஜாலியாக இருக்கிறார். (பின் குறிப்பில் விபரம் பார்க்க) இப்ப தோல்வி யாருக்கு?
// 6. போலீஸ்காரனிடம் மட்டும் தான் துப்பாக்கி இருக்கவேண்டும்.//
இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அமரபாரதி! நியூயார்க்கில் வரும் பத்திரிக்கைகளுக்கு சுதந்திரம் இல்லையென்று நினைக்கிறேன். போலிஸ்காரர் என்றால் நீதியாக இருக்க வேண்டும். இஸ்ரேலில் நடப்பதை கண்டும் காணாமல் இருப்பது தான் நல்ல போலிஸ்காரருக்கு அழகா?. மியன்மார் என்று ஒரு நாடு தெரியுமா? அங்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா? இலங்கையைப் பாதுகாக்க அமெரிக்காவை அழைப்போமா? உலக போலிஸ்காரருக்குள்ள தகுதி ஐ.நா விற்கு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அதே அமெரிக்காவின் கைப்பாவையாகி விட்டபோது வேறு என்ன சொல்வது?
//8. குவாண்டனாமோ பேவைப்பற்றி பேசுகிறீர்களே?. அது உலகத்தின் கொடூர குற்றவாளிகளின் சிறை. அது அப்படித்தான் இருக்கும். தேவாரம் என்ற மிருகம் வீரப்பவேட்டை நடத்திய போது செய்த கொடுமைகளைப்பற்றி 1991, 1992 மற்றும் 1993 களில் வந்த ஜூ.வி இதழ்களைப்படித்து இருக்கிறீர்களா?//
எப்படி வீரப்பன் செய்த கொலைகளை இதற்கு தேவாரம் நியாயமாக கற்பித்தாரோ, அதே போல் அவர்கள் செய்த கொலைகளை இதற்கு நியாயமாக அமெரிக்கா சொல்கிறது. மனிதனின் தவறுகளுக்கு பாலியல் சித்திரவதை தான் தண்டனையா? 1993 ல் நான் சிறுமி. எனவே அதைத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் தேவாரம் செய்த சித்திரவதைகள் தவறு என்றால் புஷ்ஷும் அது போன்ற ஒரு மிருகம் தானே?. குவாண்டனாமோ சிறையில் சில ஆண்டுகள் இருந்து விடுதலையான பல பிரிட்டீஸ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அப்பாவிகளுக்கு அவர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு என்ன இழப்பீடு வழங்க இயலும்?.
//9. அமெரிக்கா என்ன ஈராக் மக்களை குறி வைத்தா கொன்று கொண்டு இருக்கிறது? தமாஷ் பண்ணாதீங்க.//
அமரபாரதி! தமாஷ் யார் செய்வது? வளைகுடா போர்களின் போது தொலைக்காட்சியை நீங்கள் பார்க்கவில்லையா? பாக்தாத் நகரமும், ஆபக்ன் போரில் காபூலும் தரைமட்டமாக்கப் பட்டதே? பாக்தாத்திலும். காபூலிலும் வசித்தவர்கள் என்ன அனைவரும் தீவிரவாதிகளா? பச்சிளங்குழந்தைளின் சடலங்களையும், மனிதர்களின் மரண ஓலத்தையும் நீங்கள்
பார்க்கவில்லையென்றால், அதை உணரவில்லையென்றால், அவைகள் உங்களுக்கு தமாஷாகத் கார்டூன் படங்களாகத் தெரிந்தால், நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இருதயத்தில் கொஞ்சம் ஈரத்திற்கும் இடம் வையுங்கள். அமெரிக்காவில் வாழ்வதால் மட்டும் கண்மூடித்தனமாக படுகொலைகளை ஆதரிக்காதீர்கள்.
//10. சதாம் சித்திரவதை செய்து கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம்.//
ஆம். சதாமும் பதவி வெறி பிடித்த ஒரு சர்வாதிகாரிதான். அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை எனக்கு. குர்தீஸ் இன மக்கள் மீது நடத்திய தாக்குதல் கொடூரம் தான். அவர் கொன்ற இரண்டரை லட்சம் பேருக்கும் அமெரிக்கா ஜப்பானில் அழித்த இரண்டரை லட்சம் பேருக்கும், ஈராக்கிலும், ஆப்கனிலும் கொன்று குவித்த ஐந்து லட்சம் பேருக்கும் வித்தியாசம் இல்லையே? அப்படியானால் சதாமும், அமெரிக்காவும் ஒன்று தானே? ஈரான், ஈராக் போர் நடந்த போது அமெரிக்காவிற்கு சதாம் உசைன் நல்லவராக தெரிந்தாரே? என்னுடைய கருத்து மனித உரிமையை வைத்து தானே ஒழிய அமெரிக்கா எதிர்ப்பு மட்டுமே அல்ல. மனித உரிமை எங்கு பால்படுத்தப் பட்டாலும் அதை எதிர்க்கலாம் தானே.
// 11. இன்னும் கொஞ்சம் விளக்குவீர்களா?//
இதில் விளக்க என்ன இருக்கிறது. நாட்டில் ஒரு பகுதி மட்டும் மத, இன வேறுபாட்டால் புறக்கணிக்கப்படும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியவர்கள் உதவ வேண்டும். தனது ஆதாயத்திற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிலை எடுக்கும் அமெரிக்காவின் பச்சோந்தித்தனத்தைத் தான் அங்கு குறிப்பிட்டேன்.
//12. போலீஸ்காரனுக்கு வீட்டொ அதிகாரம் அவசியம் வேண்டும். இல்லையென்றால் இப்பொதைய தமிழக அரசைப்போல இந்த நல்ல திட்டத்தையும் செயல் படுத்த முடியாது.//
எது அதிபரின் வீட்டோ அதிகாரம்? தனது அரசியல் லாபத்திற்காக தனது படை வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பியதா? பாக்தாத்தில் கோடைகால வெப்பம் எவ்வளவு தெரியுமா? காபூலில் குளிர்காலக் குளிர் அளவு தெரியுமா? ஏன் அப்பாவி வீரர்களைக் கஷ்டபபடுத்த வேண்டும்?. காசா பகுதிகளில் இஸ்ரேலின் அத்துமீறிய அக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்த போது அதை ரத்து செய்வது தான் வீட்டோவ்வா?. இது போல பல உதாரணங்களை அடுக்கலாம். போலிஸ்காரர் ஈராக்கில் அதி பயங்கர ரசாயன, உயிரி ஆயுதங்கள் இருப்பதாக சொன்னாரே, 2003 ல் இருந்து தேடியும் கிடைக்கவில்லையா? வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கையைக் கண்டிக்கலாமே?. மியான்மரின் இராணுவ அரசை தூக்கலாமே? அதெல்லாம் இருக்கட்டும் இப்போது அமெரிக்கா ஈராக்கிலிருந்தும், ஆப்கனில் இருந்தும் வெளியேறுவது எப்போது?
//13. ஒசாமாவிற்கு நன்றியா? சூப்பர் காமடி.//
அது உண்மையில் காமெடி தான்.
இறுதியாக சில வரிகள்
உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அதை எதிர்க்க வேண்டும். அவன் கொலை செய்ததால் நானும் செய்தேன் என்பது எவ்வளவு அபத்தமான வாதம். இரத்ததிற்கு இரத்தம் என்றால் இந்த உலகில் ஒரு மனிதனும் உயிர்வாழ முடியாது. இரத்த வெறி கொண்டு அலையும் அரசியல் பதர்களை ஓட்டு என்ற ஒரு ஆயுதம் கொண்டு மட்டுமே நம்மால் எதிர்க்க இயலும். இது போன்ற கட்டுரைகளின் நோக்கம் இது போன்ற நாடுகள் எது செய்தாலும் சரி என்று ஏற்றுக் கொள்பவர்களை மாற்றி ஒரு அமைதியான உலகை உருவாக்க வேண்டும் என்பது தான். அப்படிபட்ட உலகம் உருவாகும் என நம்புவோம். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது.
பின்குறிப்பு
ஒசாமா பின் லேடனுடைய சொந்த நாடு சவுதி அரேபியா. அங்குள்ள ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த ஒசாமா அனைத்து சுகங்களையும் விட்டுவிட்டு ஆப்கனில் ரஷ்ய படைகளுக்கு எதிராகப் போராட கிளம்பியவர். வளைகுடா பிராந்தியத்தில் பின்லேடன் குழுமம் எவ்வளவு பெரியது என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியும். இராஜ வாழ்க்கை வாழும் போதே அதை விட்டு ஆப்கன் மலைகளில் துப்பாக்கி ஏந்தி போராடக் கிளம்பியவர். அங்கு அமெரிக்கா ஏஜண்ட்களின் சகவாசம் கிடைக்கப் பெற்ற பிறகு தான் வழிமாறி தீவிரவாதத்தில் இறங்கினார்.
அமெரிக்கர்க்களின் மூளைச் சலவை அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. 1990 களுக்கு பிறகு ஒசாமா சுகமான வாழ்க்கை வாழவே இல்லை. எப்போதும் போல காடு, மேடு, குகை என்று தான் இப்போதும் வாழ்க்கை ஓடுகிறது. மூத்த மனிதர் என்பதால் தான் அவருக்கு மரியாதை. ஹிரோஷிமாவில் குண்டு போட்டு அமெரிக்கா செய்த மனித அழிவுக்கும், இரட்டைக்கோபுர தாக்குதலுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.
Posted by
வித்யா கலைவாணி
at
23
comments
91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை
போன பதிவில் அமெரிக்கா எந்த அளவு உலக சுற்றுப்புறச் சூழலில் அக்கறை காட்டுகிறது என்று பார்த்தோம். ஆனால் அமெரிக்காவை குறை கூறினால் ஏற்றுக் கொள்ள முடியாத சிலரும் நம்மிடையே இருக்கிறோம். அவர்களுக்கு அமெரிக்காவின் மறுபக்கத்தை லேசாக காட்டுவதே இந்த பதிவு.
உலக வெப்பமயமாதலில் அமெரிக்கா போடும் இரட்டை வேடம் சகிக்க முடியாததாக இருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்காவின் இரட்டை வேடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
1. உலகின் மிகப்பெரிய அழிவு நிகழ்ச்சி, ஜப்பானில் ஹிரோஷிமாவில் முதலில் நிகழ்த்தப்பட்ட அணு குண்டு வீச்சு. ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதை அணு அணுவாக ரசித்த அமெரிக்கா தன் ரத்த வெறி தீராமல் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நடத்தி 75 ஆயிரம் பேரை அழித்தொழித்தது. ( விளக்கம் - பதிவுகள்83 , பதிவுகள் 84 )
2. 1959 க்குப் பிறகு அமெரிக்காவின் வழக்கம் போல் பாணியில் உதவுகிறேன் என்ற ரீதியில் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக வடக்கு வியட்நாமில் நுழைந்தது. அதை அடுத்து 1975 வரை அமெரிக்கா படைகள் வியட்நாமின் அப்பாவி மக்களை கொன்று குவித்தது. பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் அழித்தொழித்தது. விமானங்கள் குடியிருப்புப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது. உலக வரலாற்றில் இரத்தத்தால் எழுதப் பெற்ற அந்த போரில் அமெரிக்கா உலக மற்றும் தமது மக்களின் அழுத்தத்தின் காரணமாக வெளியேறியது.
3. சோவியத் ரஷ்யா என்ற ஒரு நாடு இருந்த போது, அதை உடைக்க எந்த கீழ்த்தரமான காரியத்தையும் செய்ய தயாராக இருந்தது. கடைசியில் அதை உடைத்து தன் மேலாதிக்கத்தை உலகில் நிலை நாட்டியது.
4. இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில் பிலிப்பைனில் அமெரிக்கா நடத்திய வெறியாட்டம் கொடுமையானது.
5.சோவியத் ரஷ்யாவை சிதைக்க ஒசாமா பின் லேடன் போன்றவர்களுக்கு ஆயுதம், பணம், பயிற்சி எல்லாம் கொடுத்து ஆப்கானில் உதவியது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த போது நீலிக் கண்ணீர் வடிக்கிறது.(இரட்டை கோபுர தாக்குதல் கூட பாம்புக்கு பால் வார்த்து அது கொத்திய கதை தான்)
6.உலக் நாடுகள் அனைத்தையும் அணு ஆயதங்கள் வைக்கக் கூடாது என்று மிரட்டும் அமெரிக்கா தான் மட்டும் அனைத்து வித அணு ஆயதங்களையும் வைத்துள்ளது.
7. உலகில் ஆயுத பரவலை தடுக்க வேண்டும் என்று ஒரு புறம் கூறிக் கொண்டே மறுபுறம் உலக நாடுகளுக்கு தாராளமாக ஆயுத சப்ளை செய்கிறது.
8.மனித உரிமைகள் பற்றி ஜால்ஜாப்பு பேசும் இதே அமெரிக்கா குவண்டனாமோ சிறையில் நடப்பவைகளுக்கு நியாயம் பேசும். அல்லது சிலரை மட்டும் பலிகடா ஆக்கும்.
(அபு கரீப் சிறைக் கொடுமை, குவண்டனாமோ சிறைக் கொடுமை)
9.நாட்டில் அரசியல் தலைவர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்நாட்டு மக்களைக் கொன்று குவிக்கும். ( ஈராக். ஆப்கன்)
10. உலகிலேயே பேரழிவு ஆயுதங்களைத் தாராளமாக வைத்திருக்கும் அமெரிக்கா பேரழிவு ஆயுதம் என்றால் என்னவென்று ஸ்பெல்லிங் தெரியாத ஈராக்கை ஒழித்து அங்கு இன்னும் இல்லாத பேரழிவு ஆயுதத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. ( 2007 ல் தான் ஈராக்கில் அதிகமான அப்பாவி அமெரிக்க படை வீரர்களை அமெரிக்கா பலி கொடுத்துள்ளது. பார்க்க )
11.கிழக்கு தைமூருக்கு ஒரு நியாயம் பேசும் அமெரிக்கா செசன்யாவிற்கும், போஸ்னியாவிற்கும். தமிழீழத்திற்கும் வேறு நியாயம் பேசுகிறது.
12.'வீடோ' என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஐ.நா. என்ற டம்மி சபையில் தான் நினைத்தை மட்டுமே செயல்படுத்தும் சபையாக மாற்றி வைத்துள்ளது.
13. அதிபருக்கு 'வீடோ' அதிகாரத்தை வழங்கி தனது அதிபரையே ஒரு சர்வாதிகாரியாக மாற்றி வைத்துள்ள சட்டதிட்டம் தான் அமெரிக்கா செனட் சபை சட்டம்
14.தேர்தலில் கூட தோல்வியை வெற்றியாக மாற்றும் இராஜ தந்திரம் அமெரிக்க ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. ( தேர்தலில் தனக்கு பிரச்சாரம் செய்த முன்னாள் நண்பன் ஒசாமாவிற்கு இதுவரை புஷ் நன்றி சொல்லாதது குறிப்பிடத்தக்கது.)
இதற்கு மேல் இங்கு எழுத மனசு வரவில்லை. ஆனாலும் அமெரிக்காவின் சர்வாதிகாரம் ஒழியும் நாள் வரும். கிரேக்கப் பேரரசும், ரோமானியப் பேராசும், சூரியனே மறையாத பிரிட்டீஸ் ஆதிக்கமும் ஒழிந்து விட்டது. இந்த 'அழிவு நாயகன்' அமெரிக்காவின் ஆதிக்கமும் ஒருநாள் ஒழியும். அதுவரை காத்திருப்போம்.
பின்குறிப்பு
1. இது அமெரிக்க சட்ட திட்டங்களையும், அரசியல்வாதிகளையும் வைத்தே எழுதப்பட்டது. சாதாரண அமெரிக்க குடிமக்களுக்கு இதில் விருப்பம் இல்லை என பல இடங்களில் நிரூபணமாகியுள்ளது.
2. ரொம்ப நாள் கொல வெறி ( அமெரிக்கா கத்துக் கொடுத்தது தான்) இன்னைக்கு தான் தீர்ந்தது.
Posted by
வித்யா கலைவாணி
at
49
comments
90. உலகைக் காக்க உங்கள் பங்களிப்பைத் தாருங்கள் - GW -3
கடந்த இரண்டு பதிவுகளாய் உலக வெப்பமயமாதலைப் பற்றி பார்ப்போம். இன்று அதன் இறுதியாக CFC உபயோகத்தினையும், நமது கடமையையும் பார்ப்போம்.
( முதல் பதிவு : உலக வெப்பமயமாதல் - ஆய்வு,
இரண்டாம் பதிவு : CFC உடைய பாதிக்கும் தன்மை)
பொதுவாக இன்றைய நிலையில் பசுமை வாயுக்களின் உபயோகத்தை நம்மால் நிறுத்த இயலாது. அதற்குப் பதிலாக ஏதாவது மாற்று ஏற்பாடுகளைச் செய்வதே இன்றைய சமூகத்தின் முன் உள்ள நிலை. இதை யார் மேற்கொள்ள வேண்டுமென்று பார்த்தால், யாரால் இந்த உலகம் வெப்பமயமாகிறதோ அவர்கள் தான் இதற்கு தீர்வு காண வேண்டுமென்பது தான் நியதி. அனைத்து கரங்களும் நம்ம அகில உலக அண்ணாச்சி ( நம்ம அண்ணாச்சி இல்லைங்க)யை நோக்கியே கரங்களை நீட்டுகின்றன.
உலகில் அதிகபட்சமாக சமூக சீர்கேடு மட்டுமல்ல, சுற்றுப்புற சீர்கேட்டிலுல் நம்ம அண்ணாச்சி அமெரிக்கா தான் முண்ணனியில் நிற்கிறார். உலகிற்கு குளிர்சாதனப் பெட்டிகளை முதலில் அறிமுகப் படுத்திய அவர்கள் தான் ஓசோனை சிதைப்பதிலும் கருத்தாக இருந்துள்ளனர்.
உலகில் புவி வெப்பமடைதலுக்கு காரணமான நாடுகளைப் பார்த்தால் அமெரிக்கா தான் 30.3 சதவீததுடன் முண்ணனியில் இருக்கிறது. உலகில் பாதி மக்கள் தொகையைத் தன்னகத்தே கொண்ட இந்தியா, சீனா, தெற்காசியாவில் வெறும் 12.2 சதம் மட்டுமே பங்களிப்பை செய்ய முடிகிறதாம். ஐரோப்பா முழுவதும் சேர்த்தே 27 சதம் தான் வருகிறது. (தஞ்சாவூராருக்கு நன்றி)
நாட்டாமை அண்ணாச்சி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் ஊருக்கு உபதேசம் செய்கிறார். CFC யை தடை செய்ய வேண்டும் என்று கத்திக்கொண்டே உலகம் முழுவதும் CFC விற்பனை செய்கிறார். இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் இது தனிப்பட்ட அரசையோ, நாட்டையோ பாதிக்கும் விஷயம் அல்லவே? உலகையே பாதிக்கக்கூடிய விஷயம். ஆனால் அமெரிக்கா அதில் இரட்டை வேஷத்தை தொடர்கிறது.
உலகில் உள்ள பெரிய குளிர் சாதனப் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமானவை Carrier, York, மற்றும் Trane. இவைகளின் ஜாகை அமெரிக்கா தான். உண்மையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்புற சூழலில் அக்கறை இருந்தால் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் CFC வகை குளிர்சாதனப் பெட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆனால் கணக்கு காட்ட அதை தடை செய்துள்ளோம், இதை தடை செய்துள்ளோம் என்று சொல்வதோடு சரி. இன்றுவரை இந்த நிறுவனங்கள் CFC22 வில் இயங்கும் இயந்திரங்களை தயாரிக்கின்றன. ஐ.நா சபை என்ற டம்மி சபை ரிப்போர்ட் தாக்கல் செய்வதோடு சரி. அமெரிக்காவைத் தட்டிக் கேட்க முடியவில்லை. (நம்மால் அமெரிக்காவை திட்ட மட்டுமே முடியும் என்பதால் இதை அடுத்த பதிவில் செய்து நமது கொலை வெறியைத் தீர்த்துக் கொள்வோம்)
இனி நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.
1. நம்முடைய வாகனத்தில் அதிக புகை வராமல் பார்த்துக் கொள்வோம். அப்படி வருமானால் உடனடியாக அதை சரி செய்து நமது பங்கை நேர் செய்வோம்.
2. நாம் குளிர் பதனப் பெட்டி வாங்கினால் அவை CFC FREE யா என்று பார்த்து வாங்குங்கள். இன்றைய சந்தையில் அப்படிப்பட்ட குளிர் பதனப் பெட்டிகள் கிடைக்கின்றன. CFC FREE என அட்டையிலேயே எழுதப்பட்டிருக்கும். கவனித்து வாங்குங்கள். நீங்கள் பார்க்கும் கடையில் கிடைக்கவில்லையென்றால் அவசரம் பார்க்காமல் அடுத்தடுத்த கடையில் பார்த்து வாங்குங்கள்
3. அடுத்து உங்கள் குளிர்சாதனப்பெட்டி. CFC இல்லாத வீட்டில் வைக்கும் A/C இதுவரை வரவில்லை. வீட்டிலோ அலுவலகத்திலோ A/C வைக்காதீர்கள் என்று சொல்லலாமென்றால் நிறையப் பேர் சகோதரியை அடிக்க வருவீர்கள். எனவே இங்கு உபாயங்கள் மட்டும் தருகிறேன்.
அ.ஏற்கனவே பதிவு 78, பதிவு 79 ல் கூறியது போல உங்கள் A/C யை சுத்தமாக வைப்பதன் மூலம் CFC வாயுக்கசிவை தடுக்க இயலும். இதனால் உங்கள் பணமும், ஓசோனும் பாதுகாக்கப்படும்.
ஆ. உங்களது A/C எந்த விதமான Vibration ம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
( பெரும்பாலான வாயுக்கசிவுகள் இந்த இரண்டு காரணங்களால் மட்டுமே ஏற்படுகின்றன.)
இ.உங்களது A/C பழுதாகி வாயுவை வெளியேற்ற வேண்டுமெனில் அதை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்த பரிந்துரை செய்யுங்கள். ( சில நேரங்களில் இது இயலாது. எனவே உங்கள் பங்க்குக்கு கொஞ்சம் ஓசோன் பழுதாக்குங்கள்)
இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. என்னாலெல்லாம் முடியாது என்று நாம் சொல்லாமல் நம்மால் முடிந்த அளவு சிரத்தை எடுத்து இந்த பூமியை காப்போம்.
Posted by
வித்யா கலைவாணி
at
7
comments
89.பத்தாயிரத்தைத் தனியாளாகக் கொல்லும் ஒன்றைப் பாருங்கள் - GW - 2
என்னடா இது ஏதோ அடுத்த ரஜினி படத்தோட டயலாக்குன்னு கேக்காதீங்க.இல்லை தீபாவளி படத்தோட சினிமா விமர்சனமான்னும் கேக்காதீங்க. இது போன பதிவோட தொடர்ச்சி தான். போன பதிவுல CFC பத்தி விளக்குவதாக சொல்லி இருந்தேன், இனி தொடருவோம்.
பொதுவாக பச்சையக வாயுக்கள் (Green House Gases - தமிழ்பதம் சரியானு யாராவது சொல்லுங்க)இயற்கையாகவோ அல்லது ஏதாவது செயலின் பின்விளைவாகவோ தான் இருக்கும். ஆனால் CFC மட்டும் மனிதனால் மனிதனின் செளகரியத்திற்காக உருவாக்கப்படுகிறது.CFC ல் மூன்று விதமான வாயுக்கள் சேர்ந்திருக்கின்றன. CL - குளோரின்,F - ப்ளோரின்,C - கார்பன். இதன் விகிதங்கள் மாறுவதை வைத்து அது சில வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன். R 11, R 22, R12. இவை அனைத்தும் CFC எனப்படும் குளோரோ ப்ளோரோ கார்பன்களைக் கொண்டவை. சாதாரணமாக இவைத் தனியாக இருக்கும் போது அவ்வளவாகப் பாதிப்பை ஏற்படுத்தாதவை. ஆனால் இவை மூன்றும் ஒன்றாகும் போது கிட்டத்தட்ட கும்மி அடிக்க ஒரு மொக்கையான பதிவும், பின்னூட்ட மட்டுறுத்தலும் இல்லாத இடத்தை போல் ஆகி விடும்.
காற்றில் விடப்படும் CFC காற்றில் பிரயாணித்து ஒசோன் படலத்தை அடைகிறது. அங்கு ஓசோன் படலம் சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்களை திருப்பி அனுப்பிக்கொண்டு இருக்கின்றன். இனி CFC தனது வேலையை ஆரம்பிக்கும்.
வேதி வினை
CFCl3 + UV Light ==> CFCl2 + Cl
Cl + O3 ==> ClO + O2
ClO + O ==> Cl + O2
இதில் முதலில் புறஊதாக்கதிர்களில் சேரும் CFC, தன்னில் இருந்து ஒரு Cl ஐப் பிரிக்கிறது.
அந்த குளோரின் அணு ஓசோனின் ஒரு அணுவை உடைக்கிறது. இதனால் உருவாகும் Clo பிரிந்த ஒரு ஓசோன் அணுவுடன் சேர்ந்து மீண்டும் Cl வாக மாறுகிறது. இந்த Cl மீண்டும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகிறது.
Cl + O3 ==> ClO + O2
ClO + O ==> Cl + O2
மீண்டும் தாக்குதல் தொடர்கிறது.......
Cl + O3 ==> ClO + O2
ClO + O ==> Cl + O2
மீண்டும்...ஆயிரக்காண தொடர்ச்சியான தாக்குதல்........ கிட்டத்தட்ட ஒரு CFC பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஓசோன் அணுக்களை சிதைக்கும் தன்மை கொண்டது.
ஒரு CFC அணு ஆயிரக்கணக்கான ஓசோன் அணுக்களைச் சிதைக்கிறது. CFC யின் ஆயுட்காலம் பச்சையக வாயுக்களில் அதிகமாக இருபதால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
CFC போலல்லாமல் மற்ற பச்சையக வாயுக்கள் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. ஓசோன் படலமும் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் ஆற்றல் பெற்றது தான். ஆனால் பச்சையக வாயுக்களின் தாக்குதலின் விகிதமும், ஓசோனின் சீராகும் தன்மையின் விகிதமும் தேவையான அளவு இல்லாததால் பூமியின் பல இடங்களில் ஓசோன் படலம் ஓட்டையாக இருக்கிறது.கிட்டதட்ட கிழிஞ்சு போன ஆடையுடன் இருக்கும் பிச்சைக்காரன் போலத்தான் இந்த உலகம் இருக்கிறது.சிவப்பு கோட்டுக்கு மேலே இருப்பவை உலகில் ஓசோன் படலம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்
மற்ற வாயு Vs CFC - வித்தியாசம்
ஓசோன் படலம் சீராக எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும், நமது குறைந்தபட்ச கடமை பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
அதில் அமெரிக்காவின் முகமுடி கிழிக்கப்படும். :))
Posted by
வித்யா கலைவாணி
at
19
comments
88. புவி வெப்பமடைதல் - Global Warming - 1
உலகில் உள்ள பல பொதுநல அமைப்புகள் புவியின் வெப்பமயமாதலை பற்றி பல வகைகளிலும் விளம்பரப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இது சம்பந்தமான பிரச்சாரங்கள் குறைவு தான். ஆனாலும் இது வருங்காலங்களில் இந்தியாவிலுல் அதிகரிக்கும் என நம்பலாம். நாம் அது பற்றிய ஒரு சிறு முன்னுரையை இங்கு தெரிந்து கொள்வோம்.
நமது பூமிப் பந்தானது மிகச்சிறப்பான முறையில் படைக்கப்பட்டுள்ளது. பூமிப் பந்தைச் சுற்றிலும் பல வகையான வளி மண்டல அடுக்குகள் உள்ளன. இவை சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை தடுக்கும் கவசமாக செயல்படுகின்றன. சூரியனில் இருந்து வரும் அகசிவப்பு, மற்றும் புறஊதாக்கதிர்களை வடிகட்டி அனுப்புகின்றன. இந்த வடிகட்டும் அமைப்பை சில காரணிகள் பாதிக்கும் போது அதிகமான வெப்பக்கதிர்கள் பூமியை வந்தடைந்து பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இந்த நிகழ்வை புவி வெப்பமடைதல் ( Global Warming) என்கின்றனர். இந்த காரணிகள்பல விதமான வாயுக்களால் நிகழ்கின்றன. அவைகளை Green House Gases ( தமிழில் ?) என்கின்றனர். அதிலும் ஸ்ட்ரடோஸ்பியர் (stratosphere) என்ற படலம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவில் இதைப் பற்றி மட்டும் சுருக்கமாக பார்ப்போம். இந்த stratosphere வளி மண்டல அடுக்கில் 90 சதவீதம் ஓசோன் படலத்தால் ஆனது. ஓசோனின் வேதிப்பெயர் O3. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு பெயர் உள்ளது. (எ.கா) O - ஆக்ஸிஜன், N - நைட்ரஜன், C - கார்பன், Cl - குளோரின், H - ஹைட்ரஜன். இவற்றின் அளவுகள் கூடும் போதும், குறையும் போதும் அதன் பண்புகள் மாறும். ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் காற்றில் இருப்பவை தான். அதில் ஹைட்ரஜன் இரண்டு பங்கும், ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேரும் போது அது தண்ணீராக மாறி விடுகிறது.
ஓசோன் படலம் சிதைக்கப்படும் போது சூரியக்கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்குகின்றன.
இதை சிதைப்பதில் பங்கு வகிக்கும் சில வாயுக்கலவைகளில் முக்கியமானவை
1. Co2 - carbon dioxide
2. CH4 - Methane
3. CFC - Chlorofluorocarbons
4. இன்னும் சில வாயுக்கள்
1.Co2 - carbon dioxide (கார்பன்-டை-ஆக்ஸைடு)
நமக்கு நன்கு தெரிந்தது தான். மரங்கள் அழிக்கப் படுவதால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாகி வளி மண்டல அடுக்குகளைப் பாதிக்கிறது. பச்சையக வாயுக்களில்( Green House Gases) 50 சதம் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது.அமேசான் காடுகள் 1987 ல் தீப்பற்றி எரிந்ததால் 500 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றில் பரவியது.
2. CH4 - Methane ( மீத்தேன் ) இயற்கை எரிவாயு
சுரங்க வேலைகளிலும், பச்சை மரங்கள் எரிக்கப்படுவதாலும், நிலத்தில் இருந்து கச்சா எண்ணைய் எடுக்கப்படும் போதும், ஈரப்ப்பதமான விளை நிலங்களில் இருந்தும், மாடு போன்ற விலங்குகளின் கழிவுகளில் இருந்தும் மீத்தேன் வெளியேறுகிறது.மக்கள் தொகை பெருகுவதால் இதை நிறுத்துவது மிகவும் கடினமான ஒன்று
3. CFC - Chlorofluorocarbons
நாம் பயன்படுத்தக்கூடிய குளிர் சாதன/பதனப் பெட்டிகளில் பயன்படும் ஒரு விதமான வாயு தான் குளோரோ ப்ளோரோ கார்பனாகும். இது தான் ஓசோன் படலத்தை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. (இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவு வருகிறது) சுருக்கமாக இதன் வீரியத்தைப் பற்றி சொல்வதானால் Co2 காற்றில் 10 வருடம் வரை அழியாமல் இருக்கும் தன்மையுடையது என்றால் CFC 110 வருடம் வரை தனது அழிவு வேலையை செய்யும் ஆற்றல் பெற்றது.
புவி வெப்பமடைதல் ( Global Warming) - விளைவுகள்
1. புவியின் தட்பவெப்பநிலை மாற்றம்
தொடர்ச்சியான புவி வெப்பமடைதலால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து நீர்நிலைகள் வற்றத் தொடங்கி விடும். அதே வேலையில் நிலத்தடி நீர்மட்டமும் கீழே சென்று கொண்டே இருக்கும். கட்டுப்பாடற்ற சீதோசன நிலை நிலவும். வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஒரு கட்டத்தில் மனிதன் வாழும் சீதோசன நிலையைத் தாண்டி சென்று விடக்கூடும்.
2. கடல் நீர் மட்டம் உயர்தல்
பூமியின் தொடர்ச்சியான வெப்பநிலை அதிகரிப்பால் கடலில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் படிப்படியாக உயரும். இதனால் கடற்கரை ஓரங்கள் அரிக்கப்பட்டு கடல் நீர் ஊருக்குள் வர வாய்ப்பு ஏற்படும். உலகில் உள்ள மக்கள் தொகையில் பாதிப்பேர் கடலில் இருந்து 100 கி.மீ தொலைவிற்குள் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை நிகழ பல நூறு ஆண்டுகள் ஆகும். ஆனாலும் நமது சந்ததிகளுக்கு தூய்மையான உலகைத்தர வேண்டியது நம் கடமை தானே!
புவியைக் காப்பதில் நம் பங்கு என்ன இருக்க வேண்டும் என்பதை மண். மரம், மழை,மனிதனில் தெரிந்து கொள்ளுங்கள்.
என் வேலையை சுலபமாக்கியதற்கு மண். மரம், மழை,மனிதனுக்கு நன்றி
*************####### நாளையும் மண்டை சூடாக அறுக்கப்படும் :))
Posted by
வித்யா கலைவாணி
at
21
comments
87. மலையாள சேட்டாக்களே! இது நியாயமா?
நமது தமிழ் மணத்தில் மலையாள மக்களைப் பற்றி பல பதிவுகள் வந்திருக்கின்றன. நமக்கு அவர்களையும், அவர்களுக்கு நம்மையும் கேலி செய்வது ஒரு சகஜமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஆனால் இது ஒரு சீரியஸான பதிவு. தமிழநாட்டில் இருக்கக் கூடிய நீர்த்தேக்க அணைகளில் முக்கியமானவை மேட்டூர் மற்றும் பெரியார் அணைகள். மேட்டூர் அணை சுமார் 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி)தண்ணீர் தேக்கவல்லது. அதன் உயரம் 120 அடிகள். பெரியார் அணை அவ்வளவு பெரியதாக இல்லாதது என்றாலும் 6 மாவட்டங்களுக்கு நீராதாரமாக இருப்பது.இதிலிருந்து வைகை அணைக்கு உபரி நீர் வரும். அதன் உயரம் 152 அடிகள்.
பெரியார் அணை
மேட்டூர் அணையின் நீர் மட்டம் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவைப் பொறுத்து இருக்கிறது. ஆனால் பெரியார் அணையின் நீர் மட்டம் கேரளா அரசாங்கம் என்ன விரும்புகிறதோ அதுதான். என்ன புரியவில்லை?. பெரியார் அணை வலுவில்லை எனக்கூறி கேரளா அரசாங்கம் 136 அடிக்கு மேல் நீர்தேக்க அணுமதிப்பதில்லை. இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. பல நிபுணர் குழுக்கள் ஆய்வு நடத்தி கடைசியாக 142 அடி வரை நீரைத் தேக்க அனுமதி வழங்கியது.ஆனாலும் இதை எல்லாம் கேரள அரசு கண்டுகொள்வதில்லை.
இந்த அணை கேரள, தமிழக எல்லையில் இருப்பதால் இரண்டு மாநிலங்களும் தண்ணீர் எடுக்க ஏதுமாக அமைப்புகள் உள்ளன. தமிழக வழி வழியாக குழாய் மூலம் 3 ஜெனரேட்டர்கள் வைத்து மின்சாரமும் தயாரிக்கப் பட்டு வருகிறது. இது தவிர இறைச்சல் பாலம் எனப்படும் ஒரு சாதாரணமான வழி மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்கலாம்.
சில நாட்களுக்கு முன் அணையின் நீர் மட்டம் 136 அடியை விட அதிகரித்தது. அதற்கு முன்பே தமிழகம் குழாய் வழியாக நீர் எடுக்கப் பட்டு வருகிறது. ஆனால் ஜெனரேட்டர்கள் சரியாக பராமரிக்கப் படாததால் அவை அடிக்கடி பழுதாகி சரியாக பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.எனவே இறைச்சல் பாலம் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
சமீபத்திய மழையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பல அணைகள் நிரம்பி விட்டன. பெரியார் அணைக்கும் அதிகமான அளவு நீர்வரத்து அதிகமாக இருந்தது. வினாடிக்கு இறைச்சல் பாலம் வழியாக சுமார் 1500 கனஅடி நீரும், குழாய் வழியாக சுமார் 600 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மேல் தண்ணீர் தமிழக வழியே எடுக்க இயலாது. அப்படி எடுத்தால் இறைச்சல் பாலபகுதி சாலைகள், கரைகள் பழுதாகி விடும். ஆனால் 136 அடிக்கு மேல் நீர் தேக்கப்படும் போது கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.
இறைச்சல் பாலம் - பெரியார் அணை
கடந்த வாரம் நீர் மட்டம் 137 அடியைத் தாண்டியது. தமிழக பொதுப்பணித்துறை எவ்வளவு நீர் எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்து வருகிறது. ஆனாலும் பலத்த மழை காரணமாக நீர்மட்டம் மேலும் உயர்ந்தது.கேரளா அரசு உடனடியாக தன்னுடைய பகுதியில் உள்ள 13 ஷட்டர்கள் வழியாக சுமார் 3000 கனஅடித் தண்ணீரை வெளியேற்ற ஆரம்பித்தது. ஏதாவது முக்கியமான விவசாய நிலங்கள் கருகுகிறதா என்றால் இல்லை, ஏதாவது குடியிருப்புப் பகுதிகள் குடிக்க தண்ணீர் இன்றி கஷ்டப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. வேறு என்ன? வழக்கம் போலத்தான் அரபிக்கடலில் நடக்கும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறதாம். புரியவில்லை? 136 அடிக்கு மேல் நீரைத் தேக்க விடக்கூடாது என்று அதற்கு மேல் வரும் தண்ணீரைத் திறந்து விட்டு அரபிக்கடலில் வீணாகக் கொட்டுகின்றனர். என்ன கொடுமை சார் இது? தேனி மாவட்டமே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். (எங்கள் பகுதியில் பல இடங்களில் மா, புளி, பலா போன்ற நீண்டகால விவசாயங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன) கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நல்ல மழை பொழிந்துள்ளது.
கடவுள் வரம் தந்தாலும் பூசாரி வரம் தராத கதையாய் நீர் மட்டம் உயரும் போது அதை கடலில் கொட்டுவதால் என்ன பயன்?. இதில் கேரளாவில் நடப்பது கம்யூனிஸ்ட் ஆட்சி வேறு. என்ன கருமமோ தெரியவில்லை?. சரி உச்ச நீதிமன்றம் தான் 142 அடி தண்ணீர் தேக்க அணுமதி அளித்து விட்டதே? தமிழக ஆட்சியாளர்கள் 136 அடிக்கு மேலே போகும் போது அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே? மூச்! இப்போது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஏதும் பேசாது. அடப்பாவிகளா? எதெதற்கோ முழு மூச்சாக உழைக்கிறீர்களே? தென் தமிழக விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினை, இப்போது தண்ணீரை தேக்கி வைத்தால் பின்னர் பயன் படுமே? நடவடிக்கை எடுக்கக் கூடாதா?
எங்க சேட்டன்மார்களே! உங்களுக்கு அப்படி என்ன வீம்பு? நாங்க தான உங்களுக்கு அரிசி காய்கறி எல்லாம் அனுப்புகிறோம்? கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா? ஏது பறஞ்சங்கிலுல் மனசிலாகுத்தில்ல
இந்தியாவின் சமத்துவ சமுதாயம் வாழ்க!
என்னவோ போங்கப்பா உங்க அரசியல் எங்களுக்கு புரிய மாட்டுது.
உபயோகமான குறிப்பு
பெரியார் அணை - கூகுள் எர்த்
9°57'39"N 76°57'23"E
கடலில் கடக்கும் இடம் - கூகுள் எர்த்
10°10'45.54"N 76°10'1.34"E
Posted by
வித்யா கலைவாணி
at
28
comments
86. குட்டீஸ்களின் தீபாவளி வாழ்த்து

எங்க வீட்டு குட்டீஸ்களெல்லாம் சேர்ந்து புது சங்கம் ஆரம்பிச்சிருக்காங்களாம். இன்னும் தமிழ்மணத்தில அட்மிஷன் கிடைக்காததால் அவங்க உங்க எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்றாங்க. அங்கயும் போய் பாத்துட்டு போயிடுங்க.
http://kuttiescorner.blogspot.com/
அவ்வளவு தான்.
எங்க குடும்ப சார்பா அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு:
இதை என்னோட பதிவுல போடலைனா எங்க வீட்டு மைனர் சாப்பிடமாட்டாராம். என்ன கொடுமைடா சாமி
Posted by
வித்யா கலைவாணி
at
16
comments
85. தாய் மண்ணுக்கு மரியாதை - எங்க ஊருங்க
எல்லா ஊரைப் பறறியும் பேசும் போது எங்க ஊரைப் பற்றியும் கொஞ்சம் சொல்வது தானே நியாயம். அதனால இன்னைக்கு எங்க ஊர் சிறப்பிதழ். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள அழகான ஊர் பெரியகுளம். மதுரை மாவட்டத்தில் இருந்த எங்க ஊர் இப்ப தேனி மாவட்டத்தில் இருக்கிறது. ஊருக்கு நடுவில ஒரு அழகான ஆறு ஓடுகிறது. பெயர் வராக நதி. இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலைல உருவாகி வைகை ஆற்றில் கலக்கிறது.கவிஞர் வைரமுத்து எங்க ஊருக்கு 4 கி,மீ தொலைவில் இருக்கும் வடுகபட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய பாடல்களில் வராக நதி இடம் பெற்றிருக்கிறது. ( வராக நதி வடுகபட்டி வழியாகத் தான் சென்று வைகையைச் சேருகிறது.) மேலும் ஊருக்கு வெளியே அழகான பெரிய குளம் ஒன்று உள்ளது. ( பெயர்க்காரணம்). மேலும் இது குழந்தை மாநகரம் என்றும் அழைக்கபடுகிறது. நூறாண்டு கால வரலாறு மிக்க நகராட்சி.
பெரியகுளத்திற்கு அருகில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. மலைகளின் இளவரசி கொடைக்கானல் 70 கி.மீ தூரத்தில் உள்ளது. பெரியார் அணையும், தேக்கடி வன விலங்குகள் பூங்கா 80 கி,மீ தூரத்தில் உள்ளது.
தேக்கடி வனவிலங்கு சரணாலயம்
பெரியகுளத்திலிருந்து தெற்கே 15 கி.மீ தூரத்தில் வைகை அணை மற்றும் பூங்காவும், மேற்கே 8 கி.மீ தூரத்தில் சோத்துப்பாறை நீர்த் தேக்கமும், வடக்கே 8 கி.மீ தீரத்தில் கும்பக்கரை நீர் வீழ்ச்சியும், கிழக்கே 16 கி.மீ தூரத்தில் மஞ்சளாறு நீர்த் தேக்கமும் உள்ளது.
வைகை அணை
இங்குள்ள பாலசுப்ரமணிய சுவாமி பெரிய கோவில், அனுமார் கோவில், மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில் ஆகியவை புகழ்மிக்கவை. பெரிய கோவில் சித்தர்களால் பாடல் பெற்றது.( ஊர் சென்று வரும் போது கல்வெட்டை படம்பிடித்து கொண்டு வருகிறேன்.)
சோத்துப்பாறை அணை
பெரிய கோவில்
இயற்கையாகவே அழகான எங்கள் ஊரின் சிறப்பான ஒரு விஷயம் குடிதண்ணீர். எந்த காலத்திலும் தண்ணீர் பஞ்சமே வருவதில்லை. ( மின்சாரம் போன்ற காரணங்களைத் தவிர்த்து). தினமும் காலையில் 3 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் நல்ல குடிதண்ணீர் வீட்டிற்கு வரும். பம்ப் போட்டு அடிக்க வேண்டியது இல்லை. தானாகவே 20 அடி உயரத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கூட ஏறி விடும்.சென்னை, மதுரைக்காரர்கள் பொறாமைப் படாதீர்கள்.
பெரியகுளத்திற்கு நீர் தரும் பேரிஜம் ஏரி
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் சீதோஷணமும் அருமையாக இருக்கும்.ஊரின் அமைப்பு சாய்வாக இருப்பதால் மழை காலங்களில் மழை நீர் சுலபமாக வெளியேறி விடும்.
புகழ்பெற்றவர்களென்றால் தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், கவிஞர் மு.மேத்தா, சினிமா இயக்குனர் 'சேது' பாலா மற்றும் நான் (ஓவரா இருக்கோ) பெரியகுளத்தைச் சேர்ந்தவர்கள். இப்போதைக்கு இது போதும் தான! அப்பப்ப மேலும் சொல்றேன்,
பின் குறிப்பு:
பாத்துக்குங்க எல்லாரும். நான் தமிழ்மண்ணில் பெரியகுளத்தில் பிறந்தவள். இன்னும் பெரியகுளத்தை பத்தி ஏதாவது தெரியனும்னா கேளுங்க. ( மாயவரம்னு சொல்லனும்னா அபி அப்பாவுக்கு லஞ்சம் குடுக்கலாம். இதுக்கு என்ன செய்யனு தெரியலையே)
Posted by
வித்யா கலைவாணி
at
24
comments
84. ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலின் பின்னணியும், விடுகதை விடையும்
இன்றைய பதிவு ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலின் பின்னணி பற்றியது. 1945 ஆகஸ்ட் ல் நடத்தப்பட்ட அந்த தாக்குதலுக்கு முன்னர் நிலவிய நிலைமைகளை வரலாறு.காம் சென்று தெரிந்து கொள்ளலாம்.
பியர்ல் துறைமுகத் தாக்குதல்
அது 1941 வது வருடம். ஜப்பான் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேரம். இந்த சூழலில் அமெரிக்கா தனது சந்தேகக் கண்களால் ஜப்பானை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. ஜப்பான் தனது எல்லைகளைக் கடந்து ஆசியாவிற்குள் ஊடுறுவத் துவங்கிய நேரம். அது பிலிப்பைன்ஸை நோக்கி தனது பார்வையைத் திருப்பி இருந்தது. அமெரிக்காவிற்கும், ஜப்பானிற்கும் இடையே எரி பொருள் எண்ணைய் ஏற்றுமதியில் ( அங்கேயும் தான் )சில பிணக்குகள் நிலவி வந்தது. மேலும் அமெரிக்கா ஜப்பானின் ஆதிக்கத்தை ஆசியப் பகுதிகளில் குறைக்க நினைத்தது. எனவே அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வேல்ர்ட் தனது படையை பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலை கொள்ள ஏற்பாடு செய்தார். (பிலிப்பைன்ஸில் நடந்தவை தனிக் கதை). அதற்காக தனது படைக்கலன்களை ஹவாய்க்கு அருகில் இருந்த பியர்ல் துறைமுகத்தை நோக்கித் திருப்பி இருந்தது.இது ஜப்பானை மேலும் ஆத்திரம் கொள்ளச் செய்தது. அமெரிக்கா தன்னைத் தாக்க ஆயத்தம் செய்வதாகவே இதை ஜப்பான் எண்ணியது.எனவே தான் முந்திக் கொள்வது என்று தீர்மானித்தது.
Captain Mitsuo Fuchida தலைமையிலான திறமை வாய்ந்த ஒரு வான் படை போர்க்குழு இந்த தாக்குதலை நடத்தியது. பியர்ல் துறைமுகத்தை முற்றிலும் சிதைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த தாக்குதல் மூன்று கட்டமாக ஏற்பாடு செய்யபப்ட்டது. இதன் தாக்குதல்கள் ஓஹு (OHAU) மாகாணத்தில் இருந்த போர் தளங்களைக் குறி வைத்து இருந்தன.
முதல் தாக்குதல்
இதில் மொத்தம் 189 விமானங்கள் பங்கு பெற்றன. இதன் குறிகள் துறைமுகத்தில் இருந்த போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் தகர்ப்பதுவே.மூன்று குழுவாக வந்த இந்த விமானங்கள் தங்களது இலக்குகளை சரமாரியாக அழித்து தாக்கின. இந்த நிலையில் அமெரிக்க படைகளால் எதிர் தாக்குதலைத் தொடுக்க இயலவில்லை.
இரண்டாம் தாக்குதல்
இதில் 174 விமானங்கள் பங்கு பெற்றன. இவற்றின் தாக்குதல் முழுவதும் பியர்ல் துறைமுகத்தைத் தகர்ப்பதும், விமானந்தாங்கிகளை அழிப்பதும், Ford Island, Hickham Field, Wheeler Field, Barber’s Point, Kaneohe போன்ற இடங்களைத் தகர்ப்பதுமாக இருந்த்து. இதில் அமெரிக்கப் படைகள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தின. ஆனாலும் பியர்ல் துறைமுகம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
மூன்றாவது தாக்குதல்
மூன்றாவது தாக்குதல் அமெரிக்கா படைகளின் எண்ணைய் இருப்புகளைக் குறி வைத்து இருந்தது. ஆனால் இரண்டாவது தாக்குதலில் அமெரிக்கா உஷாராக இருந்து இரண்டாவது தாக்குதலில் ஈடுபட்ட சில விமானங்களை சுட்டு வீழ்த்தியது. மேலும் இரண்டாவது தாக்குதல் முடிந்து திரும்பிய போது இரவாகி விட்டிருந்தது. எனவே அடுத்த தாக்குதல் கைவிடப்பட்டது.
பாதிப்புகள்
இந்த சரமாரியான தாக்குதலில் 2 போர்க்கப்பல்கள்,188 விமானங்கள் உள்ளிட்ட பலத்த அழிவுக்குள்ளானது. 6 போர்க்கப்பல்கள், 155 போர் விமானங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டது. மேலும் 2300 + போர் வீரர்கள் கொல்லப்பட்டனர். 1200 + போர் வீரர்கள் காயமடைந்தனர். பொது மக்கள் 55 பேர் கொல்லப்பட்டனர். ( அவை ஜப்பானிய தாக்குதல்களால் இல்லை. துறைமுகம் வெடித்துச் சிதறியதால் ஏற்ப்பட்ட உயிரிழப்பு).
இது நடந்த பிறகு அமெரிக்காவால் அடுத்த கட்ட நடவடிக்கை எதும் எடுக்க இயலவில்லை. ஒரு ரவுடியை அவனது வீட்டுக்குள் வந்து குமுறி விட்டுச் சென்ற நிலையில் தான் அமெரிக்கா இருந்தது.அதற்கு அடுத்த சில ஆண்டுகள் பழி வாங்க அமெரிக்கா காத்திருந்தது. அது 1945 ஆகஸ்டில் நிறைவேறியது. இந்த அணுகுண்டு தாக்குதலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த பியர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு பழிக்குக் பழி வாங்குவதே முக்கியமாக இருந்தது.
( முந்திய பதிவு பார்க்க)
ஈவு இரக்கம் ஏதுமின்றி நடத்தப்பட்ட அந்த தாக்குதல் தான் உலக மக்களுக்கு இழைக்கப்பட்ட அதிரடியான கொடூரத் தாக்குதல்.
இனி விடுகதைக்கு வருவோம். அமெரிக்கா என்பது உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான். தலைப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால் அந்த தலைப்பு கொடுத்தேன்.(எனக்கும் இது வியாதியாகி விட்டது).
வரலாறு.காம்லிருந்து பின்னூட்டமிட்ட சகோதரர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். ஆனந்த விகடனில் ஹாய் மதன் பகுதியில் தமிழர்களின் வரலாறு விவாதப் பொருளாக்கப்பட்ட போது வரலாறு.காம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் கணிணி அறிவு மற்றும் வாய்ப்பு இல்லாததால் அது நிறைவேறவில்லை. ஆனால் இந்த பின்னூட்டம் பார்த்த உடன் அதை சென்று பார்த்தேன். உங்களுடைய முயற்சி தொடர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள். எனது முந்தைய பதிவை எழுதுவதற்கு முன் அது தொடர்பான எந்த பதிவையும் பார்க்கவில்லை. ஆனால் தகவல்கள் மட்டும் சேகரித்தேன். ஆனால் இப்போது பார்த்த போது வரலாறு.காம் ல் ஹிரோஷிமா பற்றி எழுதப்பட்டிருக்கும் எழுத்து நடைக்கும், என்னுடைய எழுத்து நடைக்கும் சில ஒற்றுமை காணப்படுகிறது. ( காப்பி அடிக்கலைங்க) ஒரே நேர் கோட்டில் பயணிக்கக் கூடியவர்கள் என்பதால் இந்த ஒற்றுமை ஏற்பட்டிருக்கலாம். நன்றி.
Posted by
வித்யா கலைவாணி
at
1 comments
83.வரலாற்று நிகழ்வுகளுடன் ஒரு விடுகதை - விடை நாளை
அது ஒரு அழகான தீவுக்கூட்டங்களில் உள்ள ஒரு நகரம். மிகவும் அழகான அந்த நகரத்திற்க்கு மெருகூட்டுவது போல நகரின் நடுவே ஒரு நதி சல சலவென ஓடிக்கொண்டிருந்தது. நேரம் காலை 8 மணி. கதிரவன் தனது செம்மையான கரங்களைப் பரப்பிக் கொண்டு பூமியை எட்டிப் பார்க்கத் துவங்கிய நேரம்.அந்த தீவுக் கூட்டத்தின் மக்கள் இயற்கையாகவே மகிழ்ச்சியானவர்கள். உலக மக்களால் அவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று போற்றப்படுபவர்கள்.
காலை நேரமாதலால் பள்ளி செல்லும் குழந்தைகளும், வேலைக்கு செல்பவர்களும் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். அந்த அழகான நதிக்கரையின் ஓரத்தில் காலைப் பொழுதை சிலர் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்களுடைய நாடு அப்போது நடந்து கொண்டிருந்த ஒரு போரில் வெற்றிகளைக் குவித்து வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் தங்களது நாடு வெற்றி மேல் வெற்றி பெறுவதை மகிழ்வுடன் பேசிக் கழித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் பயங்கரத்தை உணராமல்,.
இப்போது மணி 8:12. அந்த நகரை நோக்கி அழகான ஒரு பறவை வேகமாகப் பறந்து வந்து கொண்டிருக்கிறது. தரையிலிருந்து சுமார் 9357 மீட்டர் தூரத்தில் அந்த நகரத்தின் மையத்தில் வந்தவுடன் அந்த பறவையின் வயிற்றில் இருந்து ஒரு குட்டிப் பையனை பிரசவிக்கிறது. பிரசவித்த வேகத்தில் 155 பாகையில் திரும்பி வந்த வழியே செல்கிறது.9357 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் விடப்பட்ட அந்த "குட்டிப்பையன்" மிக வேகமாக கீழே வருகிறான். தரையிலிருந்து 576 மீட்டர் தூரத்தில் 15 கிலோடன் விசையுடன் வெடித்து சிதறி விட்டான்.
அதி பயங்கரச் சத்தத்துடன் அந்த குட்டிப் பையன் வெடித்ததால் அந்த நகரமே அதிர்ந்தது. ஊரெங்கும் ஒரே புகை மூட்டம். காற்றின் வெப்பநிலை வேகமாக அதிகரிக்கிறது. எங்கு பார்த்தாலும் நெருப்பு. வீடுகளும் கடைகளும் எரிந்து சாம்பலாகின்றன்.வாகனங்கள் வெடித்துச் சிதறுகின்றன. அந்த அழகான நதிக்கரையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். உடல் முழுவதும் எரிச்ச்சல். தாங்க முடியாத வெப்பம். வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க அந்த நதியில் குதிக்கின்றனர். அந்தோ பரிதாபம்! அப்போது தான் அந்த நதிநீர் கொதி நிலையை அடைந்து கொண்டிருந்தது. குதித்தவர்கள் ஜலசமாதியாகின்றனர். ஊரே மரண ஓலம். எங்கும் பிணம். அந்த நதியே பிணங்களால் மிதக்கிறது. ஊர் முழுவதும் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிந்து சாம்பலாகி விட்டது.
இது கதையல்ல நிஜம். அந்த தீவுக்கூட்டத்தின் பெயர் ஜப்பான். அந்த நகரம் ஹிரோஷிமா. அந்த அழகான நதியின் பெயர் ஒடா(Ota). (மேலே உள்ள படம் தற்போதையது). நடந்த ஆண்டு 1945 ஆகஸ்ட் 6. வந்த அலுமினியப் பறவையின் பெயர் Enloa Gay. வந்த குட்டிப்பையனின் பெயர் 'Little Boy'.
ஆகஸ்ட் 7 1945
அந்த நகரம் முற்றிலும் அழிந்து போய் விட்டது. பலியான மக்களின் எண்ணிக்கை 1,40,000. படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,000. ஹிரோஷிமா நகராட்சி வெளியிட்ட தகவல் இது. அதிகாரப் பூர்வமாக இல்லாமல் பலியானவர்கள் எண்ணிக்கை இதை விடக் கூடும். உலகமே அதிர்ந்து போகின்றது. எரிந்து போய் கதிர்விச்சால் பாதிக்கப்பட்ட அந்த நகருக்குள் வந்து மீட்புப் பணியை செய்ய முடியாமல் அரசாங்கமே திணருகின்றது.
ஆகஸ்ட் 8 1945
உலகமே இதைக் கவலையுடன் பேசிக் கொள்கிறது. இரண்டாம் உலகப் போரின் போக்கு மாறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
ஆகஸ்ட் 9 1945
ஜப்பானிய மக்களுக்கு மிகுந்த கவலையுடன் இந்த நாள் விடிகின்றது. அதே சமயம் அணுகுண்டைப் போட்டு விட்டுச் சென்ற அந்த நாட்டின் உயரதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது. அவர்களுக்கு இரத்த வெறி மிகவும் அதிகமாகி விட்டதாம். இந்த வாய்ப்பை நழுவ விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காதே.மேலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா! இவன் ரொம்ப நல்லவண்டா என்ற ரீதியில் பேசிக் கொள்கின்றனர். இந்த தடவை ஹிரோஷிமா வேண்டாமாம். ஏனெனில் அங்கு அழிக்க எந்த ஜீவராசியும் மிச்சம் இல்லை. இந்த தடவை இலக்கு நகரம் நாகசாகி.அது வியாபாரத் துறைமுக நக்ரம்.இப்போது காலை நேரம் இல்லை. மதியம் 11.02. நாகசாகி நகரின் மீது அலுமினியப் பறவை B29 பறந்து வந்து குண்டு மனிதனைப்(Fat Man) போட்டு விட்டுச் செல்கிறது. இப்போது சேதம் குறைவு தான். சுமார் 74,000 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர்.அதே அளவு மக்கள் படுகாயம்.
ஆகஸ்ட் 10 1945
மீண்டும் உலக மக்கள் மீள இயலாத துக்கத்தில் ஆழ்கின்றனர். ஜப்பான் முழுவதும் மரண ஓலம். அதே நேரம் குண்டு வீசி விட்டு வெற்றிகரமாகத் திரும்பியதற்கு படைத்தலைவர் கார்ல் ஸ்பார்ட்ஸ்(Carl A Spaatz)தலைமையில் விருந்து.
ஆகஸ்ட் 11 1945
குண்டு வீசிய நாடு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தயாரித்த அணு குண்டு சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுவிட்டதல்லவா?. அதனால்.
ஆகஸ்ட் 12 1945
மீண்டும் அந்த நாட்டில் இருந்து விமானம் பறந்து வருகிறது. மக்கள் ஆவலுடன் வானத்தைப் பார்க்கின்றனர். ஏனெனில் எரிக்கும் செலவு இல்லாமல் மரணத்தைக் கொடுக்க அந்த விமானங்கள் வருமே என்று. ஆனால் அவர்கள் நம்பிக்கை வீணாகி விட்டது. அவைகள் அணு குண்டுகளை வீசாமல் வெறும் காகிதங்களை வீசிச் செல்கின்றன. அதில் உடனடியாக சரணடைய வில்லையெனில் மீதம் உள்ள நகரங்களும் நரகமாக்கப் படுமாம். அவர்களிடம் உள்ள இன்னும் சில ஆயுதங்களை சோதித்துப் பார்க்க வேண்டுமாம்.
ஆகஸ்ட் 13 1945
இன்றும் காகித எச்சரிக்கைகள் தொடர்கின்றன்.
ஆகஸ்ட் 14 1945
ஜப்பான் உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி சரணடைகின்றது.
இனி விடுகதை தான்
இந்த அளவு மிகுந்த இரக்கத்துடன் மக்களை மதித்து, மனித உரிமைகளைக் காத்து, இரண்டு அணு குண்டுக்கு மேல் வீசாமல் கொஞ்சமாக இரண்டரை லட்சம் மக்களை மட்டும் சந்தோசமாக மறுஉலகிற்கு அனுப்பிய அந்த நாடு எது? இது தான் இன்றைய விடுகதை. விடை நாளை.
Posted by
வித்யா கலைவாணி
at
20
comments
82. இந்திய பொருளாதார வளர்ச்சியும், வளைகுடா இந்தியர்களும்
இந்தியாவின் பொருளாதாரம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் 20,000 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைத்த டாலர் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 ஆக மாறி விட்டது.உலகின் மிகப் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி மாறி விட்டார். இந்தியர்கள் பெருமிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சியா, வீக்கமா என்று என்னுள் மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. இது வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். நமது கட்டுரையின் நோக்கம் இதை ஆராய்வது அல்ல. வளைகுடாவில் இருக்கும் லடசக்கணக்கான இந்தியர்களுக்கும், இந்த பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதே ஆகும்.
பொதுவாக வளைகுடா பிரதேசங்களில் இருக்கும் இந்தியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களே. அதிலும் தமிழர்கள் 350,450 திர்ஹமிற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். அபி அப்பா கூட ஸ்மார்ட் ராமசாமி என்ற பதிவில் இதை விளக்கியிருப்பார். சுருக்கமாகச் சொன்னால் 80 சதவீதம் பேர் 8000 ரூபாய்க்குள் வேலை செய்பவர்களே. காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்து இந்த பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.
கடந்த ஓராண்டாக டாலரின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் நிலை திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2002 ல் 750 திர்ஹம் இருந்தால் 10,000 ரூபாய் அனுப்பி விடலாம். (2002 மே 1000 ரூபாய் = 74.30)ஆனால் இப்போது 970 திர்ஹம் தேவைப்படுகிறது. 2007 மே கிட்டத்தட்ட 15 முதல் 20 சதம் வரை இழப்பு ஏற்படுகிறது.ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்னதான் உயர்ந்தாலும் விலைவாசி குறைவதாய் இல்லை. அதற்கு அரசும் ஏதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. பாலின் விலையும், அரிசி, பருப்பின் விலையும் ஏறிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைவதே இல்லை.
5000 அனுப்பியவர்கள் இப்போது 4000 மட்டுமே அனுப்ப முடிகிறது. 5000 த்தில் துபாய் செல்ல வாங்கிய கடன், அதற்கு வட்டி, வட்டி போட்ட குட்டி என அனைத்தையும் அடைத்து குடும்பத்தையும் காப்பாற்றக் கஷ்டப்பட்டவர்கள் இப்போது 4.000 எனும் போது மேலும் முழி பிதுங்கி நிற்கின்றனர்.
வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான். அபி அப்பா குறிப்பிட்ட அந்த இரு பெரிய கிளினிங் கம்பெனிகளில் ஆண்டாண்டுகாலமாக 350, 450 திர்ஹம் தான் சம்பளம். சம்பள உயர்வே கிடையாது.ஆனால் இந்தியாவில் எவையெல்ல்லாம் அத்தியாவசியத் தேவையோ அவையெல்லாம் விலை உயர்கின்றன. ஆடம்பரத் தேவை உள்ளவைகளின் விலை குறைகின்றன்.
இதனுடைய வெளிப்பாடு தான் சமீபகாலங்களில் துபாயில் நடக்கும் போராட்டங்கள். ( அதன் ஒரு பகுதியைப் பாருங்கள்). போன வாரம் 4000 பேர் கைது செய்யப் பட்டு நாடுகடத்தப்பட இருந்தனர். ஆனாலும் அதில் 100 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன். 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் - அபுதாபி சாலையில் மறியல் செய்யப்பட்ட போது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அரசும் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.
வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு நாடுகள். எது நடந்தாலும் நாட்டாமை புஷ் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்பவர்கள். டாலர் வீழ்ச்சியடைந்து வரும் போது அவர்களுடைய நாணய மதிப்பை அதிகரிப்பதில்லை. உண்மையில் அவர்களுக்கு அதற்கு உரிமையில்லை.
1. டாலருக்கு நிகரான தமது நாணய மதிப்பை வளைகுடா நாடுகள் உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு மாற்றப் போவதில்லை.
2. வளைகுடா நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் ( இந்தியர்கள் வேலை செய்யும் பல நிறுவன நிர்வாகிகள் இந்திய பண முதலைகள் என்பது வேதனை) தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தப் போவதும் இல்லை.
3. இந்தியர்கள் வளைகுடாவை விட்டு 'போதும்பா சாமி' என்று திரும்பப் போவதும் இல்லை.
4. வழக்கம் போல இந்தியாவில் விலைவாசி குறையப் போவதுமில்லை.
5. இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.
அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு?.எல்லாம் நம் தலையெழுத்து என்று கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.
Posted by
வித்யா கலைவாணி
at
25
comments
Labels: வளைகுடா பகுதி
