தமிழாசிரியையுடன் ஒரு தமிழ் கலந்துரையாடல்
சமீபத்தில் ஒரு தமிழாசிரியையுடன் சாட்டில் சாதாரணமாகப் பேசியது ஒரு விவாததை நோக்கி இழுத்துச் சென்றது. அந்த தமிழாசிரியை தமிழை தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் . பல ஆண்டுகளாக தமிழாசிரியையாக பணி செய்து ஓய்வு பெற்றவர் . அந்த உரையாடலை முடிந்த அளவு சீர்செய்து இங்கு தருகிறேன் .
வித்யா : வணக்கம்மா
தமிழாசிரியை : வணக்கம்
வித்யா : அம்மா நல்லா இருக்கீங்களா?
தமிழாசிரியை : நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?
வித்யா : ம் உங்க ஆசியில் நல்லா இருக்கேன்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;
**************
&&&&&&&&&&&&
வித்யா : நல்ல அனுபவங்களைத் தருகிறீர்கள். வரவேற்கிறோம். ஆனா நாங்க புது தலைமுறை ஆளுங்க. அதனால எங்களுக்கு புரியும்படி எழுதலாமே?.
தமிழாசிரியர் : மொழி நடை எல்லாம் அவரவர் இயல்பு. புரிந்து கொள்ள முயற்சி செய்க.
வித்யா : இன்றைய மக்கள் புரிந்து கொள்ளும் நடைமுறைத் தமிழில் நீங்க ஏன் எழுதக்கூடாது?
தமிழாசிரியை : நடைமுறைத் தமிழில் எழுதினால் தமிழ் வளர்ச்சி என்பது தொலைக்காட்சித் தமிழ் போல் ஆகிவிடும்
வித்யா : படிக்க எங்களுக்கு கடினமா இருக்கே
தமிழாசிரியை : படிக்கப் படிக்க பழகி விடும் - இதை நான் நடைமுறையில் செய்முறையாக கண்டுள்ளேன்
வித்யா : நீங்கள் எழுதுவது கிட்டதட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிய தமிழா இருக்கே? அது எப்படி மீண்டும் வரும்? காலத்துக்கு ஏற்றார் போல் தமிழும் மாறுகிறது. நாமும் மாற வேண்டும். இது தானே நியாயம்.
தமிழாசிரியை : தமிழ் அறிந்தவர்கள் இத்தகைய நடையைத்தான் பயன்படுத்துவார்கள். பேச்சுத் தமிழும் பொதுத் தமிழும் அறிந்தவர்களே நடைமுறைத் தமிழை பயன் படுத்துவார்கள்
வித்யா : தமிழ் அறிந்தவர்கள் எனபது யாரை என்று விளங்கவில்லை. அதை கொஞ்சம் விளக்க முடியமா? அதற்கு ஒரு எல்லை வேணுமே?
தமிழாசிரியை : தமிழ் இலக்கியங்களை அறிந்தவர்கள்
வித்யா : அப்படியானால் இலக்கியம் அறிந்தவர்கள் எதை, எந்த முறையில் எழுதுகிறார்களோ அது தான் தூய தமிழா?
தமிழாசிரியை : தூய தமிழ் என்பதில்லை - நடை உயர்ந்த தமிழ் என்பது அது. ஏன் ஆங்கிலத்தில் high language என்பதை ஏற்றுக்கொள்கிற நாம் இதை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது
வித்யா : சரி. உங்களது கருத்தின் அடிப்படையில் ஏதாவது தமிழறிந்த அறிஞர் யாரையாவது கூறுங்கள்?
தமிழாசிரியை : வைரமுத்துவின் பாடல் அடிகளுக்கும், மற்ற கவிஞர்களின் பாடல் அடிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லையா?
வித்யா : அப்படியானால் வைரமுத்துவின் மொழி நடை சிறந்த நடைகளில் ஒன்று. சரி தானா?
தமிழாசிரியை : காலத்தோடு ஒட்டிய நடை மிகச் சரியே
வித்யா : அவரும் காலத்திற்கு ஏற்றார் போல் எளிய மொழி நடையில் சினிமாவிற்கு கவிதை எழுதுகிறாரே? டப்பங்குத்து பாடல் உட்பட
தமிழாசிரியை : அது - சினிமாவிற்கு எழுதுவது தொழில் -
வித்யா : அப்படியானல் வருமானத்திற்கு தமிழை மாற்றிக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
தமிழாசிரியை : முடியாது - வருமானத்துக்கக தமிழை மாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வாழ வேண்டும் என்றால் ஒரு வழியைத் தேடித்தானே ஆக வேண்டும்
வித்யா : சரி அதே போல் நீங்கள் விரும்பும் இலக்கியம் ஒன்றையும் கூறூங்கள்
தமிழாசிரியை : தமிழ் இலக்கியத்தில் ஒன்றல்ல - ஓராயிரம் இலக்கியங்கள் உண்டு. மு.வ வின் மொழி நடை, தொல்காப்பியத்தின் உரை விளக்கம், சிலம்பின் சீரிய நடை, இவற்றை எல்லாம் படிக்கும் போது நம்மை அறியாமலெயே நன்நடை வந்து விடும்
வித்யா : சரி அதை விடுங்கள். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் பற்றி கூறினீர்கள்
தமிழாசிரியை : ஆமாம்
வித்யா :
'நிலப் பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர்
உடைப்பெயர் பண்பு கொள் பெயரே' இது தெரிகிறதா?
தமிழாசிரியை : ஆம் இது தொல்காப்பியம்
தமிழாசிரியை : பெயர் வினை பண்புச் சொற்கள் இலக்கண அடிப்படையில் உள்ளன. என்பதற்கு உரிய விதி இது. தொல் காப்பியம் / நன்னூல் - இவற்றை விளக்கும்
வித்யா : சரி
வித்யா : அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
என்ன பெயரும் அத் திணையவ்வே.
தமிழாசிரியை : தொல்காப்பியம் தான்
வித்யா : இதுவும் தொல்காப்பியம் தான், எனக்கு இது புரியவே இல்லை. அதாவது விளங்கவில்லை
தமிழாசிரியை : அது சரி - அதான் நானே கூறி விட்டேனே. இது செய்யுள் நடை. உனக்கு புரியாது.
வித்யா : நீங்க ஏன் இந்த தமிழ் மொழி நடையில் எழுதுவதில்லை.?
தமிழாசிரியை : காலம் சென்ற தமிழுக்கும் காலத்தின் தமிழுக்கும் வேறுபாடு இல்லையா ?? இப்படியே போனால் எதிர்காலத் தமிழ் மறைந்து விடும்
வித்யா : இதைத் தான் நானும் சொல்கிறேன்
தமிழாசிரியை : தற்போதைய தமிழ் நடை - பேச்சு நடை - எழுத்து நடை என்பது வேறுபாடில்லாமல் வளர்ந்து வருகிறது. வளரும் தலை முறையினருக்கு இது மறந்து போனால் தமிழ் மறந்து போகும்
வித்யா : நீங்கள் எழுதும் தமிழ் எங்களைப் போன்ற புதிய தலைமுறைக்கு புரிய கடினமாக இருக்கிறது. எனவே உங்கள் அனுபவங்களை எங்களுக்கு புரிந்த தமிழில் சொன்னால் சுலபமாக புரியுமல்லவா ?
தமிழாசிரியை : பல முறை படித்தால் நடை பழகி விடும். பேச்சுத் தமிழில் எழுதுவது என்பது என்னால் இயலாத ஒன்று.
:::::::::::::
:::::::::::::::::
வித்யா : வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் தெரியுமா?
தமிழாசிரியை : கருவாச்சி காவியம் தானே?
வித்யா : ஆமாம். படித்துள்ளீர்களா? அதன் மொழி நடை தெரியுமா?
தமிழாசிரியை : வார இதழ்களில் குறுங்கதைகளைப் படிப்பது என் இயல்பல்ல. அது வட்டாரத் தமிழ். வைர முத்துவின் 'சிகரங்களை நோக்கி' என்ற கவிதை நூல் அவரது முதற் கவிதைப் படைப்பாகும். கருவாச்சி காவியம் வட்டாரத் தமிழை அடிப்படையாகக் கொண்டது. ஆஸ்திரேலியாவில் இருந்த தன் மகனுக்கு வைர முத்து எழுதிய முதல் மடல் அதே வார இதழில் வெளி வந்தது. அது அவரது உயர்ந்த தமிழ் நடையில் அமைந்தது
வித்யா : அதை எழுதிய வைரமுத்து அதை சரிகாணும் போது நீங்களும் அது போல தமிழ் உலக வட்டாரத்திற்கு தெரிந்த தமிழில் எழுதலாமே?
தமிழாசிரியை : என்னிடத்திலே ஆண்டுக்கு அறுனூறு பேர் பேச்சுத் தமிழும் தெரியாமல் எழுத்துத் தமிழும் தெரியாமல் சென்னைத் தமிழோடு வந்தனர். அவர்களை எல்லாம் திருத்தி தமிழை அறியச் செய்த என் நோக்கம் தான் இந்தத் தமிழ் நடையின் வளர்ச்சி
வித்யா : உங்களுடைய தமிழ் பற்றை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அடுத்தடுத்த தமிழ் நடைக்கு செல்வது தானே நியாயம்
தமிழாசிரியை : எனது நடை என் விருப்பத்திற்காக எழுதப்பட்ட நடை. நான் எதையும் எவருக்ககாவும் எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டேன். இது என் இயல்பு
வித்யா : அம்மா கோபமாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும். இது சாதாரணமான உரையாடல் தான்
தமிழாசிரியை : என்னுடைய மொழி நடையே இத்தகைய நடை தான். கோப நடையே வேறு
வித்யா : ஆகா கோப நடை வேறு இருக்கா பயமுறுத்துகிறீர்களா?
தமிழாசிரியை : இல்லை இல்லை –
வித்யா : என் தமிழ் நடையை எப்படி உணர்கிறீர்கள்?
தமிழாசிரியை : தமிழ் கொஞ்சம் அறிந்தவர் என்று தெரிகிறது?
வித்யா : நான் கேட்பதும் இது தான். நாங்கள் எழுதுவது போன்ற மொழி நடையில் எழுதுங்கள் என்று
தமிழாசிரியை : எனக்கு அத்தகைய நடை பிடிப்பதில்லை
வித்யா : தங்களை சென்னை மொழி வழக்கில் எழுதுங்கள் என்று சொல்ல வில்லை. நாங்கள் எழுதுவது போல் இன்று இருப்பது போல் எழுதலாமே?
தமிழாசிரியை : 35 ஆண்டு காலப் பழக்கம் அவ்வளவு எளிதில் மாறாது.
வித்யா : //எனக்கு அத்தகைய நடை பிடிப்பதில்லை// இதை உங்களைப் போன்ற திறமைசாலிகள் கூறக்கூடாது
தமிழாசிரியை : ஏன் என்றால் வளரும் தலை முறையினர் அது தான் தமிழ் என்று நினைத்து விடுகிறார்கள். வளர்ந்தவர்களைப் பற்றி கவலை இல்லை.
வித்யா : விறகு அடுப்பில் இருந்து எரிவாயு அடுப்புக்கு சுலபமாக மாறினோமே! அது போல காலத்தின் தேவைக்கு மாற ஏன் தயக்கம்?
தமிழாசிரியை : வாழ்க்கை பழக்க வழக்க முறை என்பது வேறு. மொழி என்பது வேறு, அறிவியலால் வாழ்க்கை முறை மாறும். மொழி நடை மாறாது. அறிவியல் கருத்துகள் மொழியில் இடம் பெறும்.
வித்யா : மொழி வழக்கம் மாறி உள்ளதே
தமிழாசிரியை : என்ன சொல்ல வருகிறாய்
வித்யா : 1950 களில் பேசிய எழுதிய தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?
தமிழாசிரியை : அக்காலத் தமிழ் பாடல் வடிவிலேயே இடம் பெற்றது. இன்று உரை நடையிலேயே கருத்து உணர்த்தப் படிகிறது. புதுக் கவிதை மரபை ஏற்றுக் கொள்கிற நாம் உரைநடையிலும் ஒரு அழகிய வடிவை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
வித்யா : பெரியார், அண்ணா பேசிய தமிழுக்கும் இன்றைய கலைஞர் பேசும் தமிழுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது? அக்காலத்தில் வாழ்ந்த கலைஞர் கூட தனது தமிழை மாற்றி விட்டாரே
தமிழாசிரியை : கலைஞர் மாற வில்லை. அவர் பேச்சில் பிறரைக் காட்டிலும் இலக்கிய நடை ஒளிரும். பிறர் வந்து சென்றேன் என்பதை அவர் வந்தேன் கண்டேன் சென்றேன் என்பார்.
வித்யா : அவரது இலக்கிய நடை மெருகேறுவதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால்
தமிழாசிரியை : ஆனால் ....
வித்யா : 1960 களில் பேசியது போல போன்று இன்று பேசுவதில்லையே
தமிழாசிரியை : மெருகேறி இருக்கிறது - காலத்தின் கட்டாயம்.
வித்யா : அதே காலத்தின் கட்டாயம் தான் நான் சொல்வதும், கலைஞர் 60 களில் பேசியது போல் இன்று பேசினால் ஓட்டு விழாது. கவியரங்கங்களில் மட்டும் தான் உயர்ந்த நடையில் பேசுவார்
தமிழாசிரியை : இல்லை இல்லை. உன்னுடைய ஒரு பதிவைப் படித்து விட்டு நாளை அதைப் பற்றி பேசுகிறேன். இப்போது தொடர்க. அரசியல் தொழில் கலைஞருக்கு. தொழில் வேறு - மொழி வேறு.
வித்யா : ஆகா. அப்ப என் பதிவுல குறை கண்டுபிடிச்சு வந்து நாளைக்கு கும்மியா?
தமிழாசிரியை : ஆமா, பின்னே
வித்யா : அம்மா என்னுடைய தமிழ் சிறந்தது என்று நான் கூறவில்லை
தமிழாசிரியை : நானும் கூற வில்லை மகளே
தமிழாசிரியை : கருத்தினைப் பொறுத்து நடை மாறும். பாப்பாவைப் பார்த்து வா கண்ணா வா என்றுதான் கூற முடியும். வாருங்கள் வாருங்கள் என்றா சொல்ல முடியும்
வித்யா : மொழி இலக்கணத்தை மாற்ற நான் அனுமதியேன், மொழி நடையைத் தான் கூறுகிறேன்
தமிழாசிரியை : மொழி வரலாறே அனுமதித்திருக்கிறது. தவழுகின்ற குழந்தை எழுந்து நடப்பதற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதைப் போல என்று மு.வ மொழி வளர்ச்சியைக் கூறுகிறார்.
வித்யா : //கண்ணா வா// என்பதை வாம்மா செல்லம் எனபது போல கூறலாமே எனபது தான் என் கருத்து
தமிழாசிரியை : 35 ஆண்டு காலப் பழக்கம் அவ்வளவு எளிதில் மாறாது. கவிதை நடைச் சாயல் என் உரை நடைக்கு உண்டு - அதை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது.
வித்யா : சரிம்மா இத்துடன் நாம் முடித்துக் கொள்வோம். உங்களுடைய தமிழுக்கு எனது வந்தனங்கள்
தமிழாசிரியை : ஏன் பயந்துகிட்டு ஓடறே ?
=========
பின்குறிப்பு:
எழுத்துப் பிழை இருந்தால் அது என் தவறே. இந்த உரையாடல் எந்த முன் தயாரிப்பும் இன்றி நடந்தது.

10 comments:
வித்யா கலைவாணி,
எனக்கு இந்தத் தமிழாசிரியை யார் என்று ஒரு புரிதல் இருக்கிறது. இவர் வலைப்பதிவுகளும் எழுதுகிறார். சரியா? அவருடைய பதிவில் 'மொழி நடை எல்லாம் அவரவர் இயல்பு. புரிந்து கொள்ள முயற்சி செய்க.' என்றொரு பின்னூட்டைக் கண்டேன். அதனால் அவருடன் தான் நீங்கள் அரட்டை அடித்து அதனை இங்கே சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா? :)
என்னுடைய பதிவுகளை எப்போதாவது படித்திருக்கிறீர்களா? என் எழுத்து நடை எப்படி இருக்கிறது? புரிகிறதா?
:)))
:(((
குமரன் ,
உங்களுக்கு விஷ்யமே தெரியாதா? வித்யா அவர்களுக்கு மல்டி பெர்சொனலிட்டி டிஸாடர் (அதாங்க நம்ம அன்னியனும், சந்திரமுகியும்!!)
தமிழாசிரியை இவங்களோட இன்னொரு பெர்சொனலிட்டி..! அதுதான் இப்படி எல்லாம் பதிவாக வெளியாகுது. கேட்கவே திகிலாக இருக்கு இல்ல, ஆனா இது தான் உண்மை.:))))
//குமரன் (Kumaran) said...//
வருகைக்கு நன்றி. தங்கள் அனுமானம் சரியே!
உங்கள் பக்கத்திற்கு சென்றேன்.. உங்கள் கடும் முயற்சிகள் தெரிகின்றன். என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இன்றைய எங்கள் நண்பர்கள் கொஞ்சம் நல்ல தமிழில் இருந்தாலே ஓடி விடுகின்றனர். அதற்கு தான் இந்த பதிவு.
//கோபிநாத் said...
:)))
:((( //
சாட்டியதை அப்படியே தந்தால் உங்களுக்கு ஏமாற்றம் இருக்கலாம். மன்னிக்கவும்.
//குட்டிபிசாசு said...
குமரன் ,
உங்களுக்கு விஷ்யமே தெரியாதா? வித்யா அவர்களுக்கு மல்டி பெர்சொனலிட்டி டிஸாடர் (அதாங்க நம்ம அன்னியனும், சந்திரமுகியும்!!)
தமிழாசிரியை இவங்களோட இன்னொரு பெர்சொனலிட்டி..! அதுதான் இப்படி எல்லாம் பதிவாக வெளியாகுது. கேட்கவே திகிலாக இருக்கு இல்ல, ஆனா இது தான் உண்மை.:))))///
சுடுகாட்ல உட்காந்து யோசிக்கிறீங்களோ! பயமுறுத்தாதீங்க. அவங்களோட அறிமுகம் அடுத்து வரும்ப்பா! என்ன கொல வெறியோ?
குட்டிப்பிசாசு!!
இதுவரை நீ குறிசொல்லி வாக்குத் தப்பவே இல்லையப்பா.
யார் யாருக்கு என்னென்ன நோயோ? ஈஸ்வரா! ஏனப்பா இப்படி சோதிக்கிறாய்!!
நம்ம கலைவாணி ரெம்ப நல்லவங்கதானே!!!
குட்டிச்சாத்தான்
தமிழாசிரியை யாரென்று ஊகிக்க முடிகிறது..பிறருக்காக எழுதும் நடை மாற்றிக் கொள்வது கடினம்தான்..சற்று ஊன்றிப் படிக்கப் பழகவேண்டியது
தான்...புரிந்துவிடும்.....
//இன்றைய எங்கள் நண்பர்கள் கொஞ்சம் நல்ல தமிழில் இருந்தாலே ஓடி விடுகின்றனர். அதற்கு தான் இந்த பதிவு.//
ஓடுபவர்கள் ஓடினாலும் படிப்பவர்களும் இருப்பார்கள்...(அந்திமழை பாடலையும்...கருவாச்சி காவியத்தையும் ஒரே அளவு ரசிக்கப் பலரால் முடியும்)
No comments
//
கோபிநாத் said...
:)))
:(((
//
REPEATEYYYYY
Post a Comment