இந்திய வெங்காய ஏற்றுமதிக்குத் தடை: 'கண் கலங்கும்' யு.ஏ.இ!

துபாய்:

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஐக்கிய அரபு நாடுகளில் வெங்காய விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.கே குழுமத்தின் நந்தகுமார் கூறுகையில், இந்திய வெங்காயம்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து எமிரேட்ஸுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இங்கு பெருமளவு வெங்காய விலை உயர்வும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதிலும் ரமலான் மாதத்தின்போது இந்த தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். வெங்காயப் பற்றாக்குறை விரைவில் விஸ்வரூபம் எடுக்கும்.

எமிரேட்ஸ் வாசிகளை விட இங்குள்ள இந்தியர்களுக்குத்தான் பெரும் திண்டாட்டமாகப் போகிறது. பிற நாட்டினரும் கூட இந்திய வெங்காயத்திற்குப் பிரியர்களாக உள்ளனர். அவர்களும் சிரமப்படுவார்கள்.

இந்தியத் தடை அமலுக்கு வந்துள்ளதால் வேறு மார்க்கத்தை இங்குள்ள இறக்குமதியாளர்கள் நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றார்.

துபாயைச் சேர்ந்த இறக்குமதியாளர் கராமத் ஹுசேன் கூறுகையில், இந்திய வெங்காயம், இங்குள்ள வெங்காய மார்க்கெட்டில் 70 சவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.

எனவே இந்திய அரசு விதித்துள்ள வெங்காய ஏற்றுமதிக்கான தடை இங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது ஈரானிலிருந்து வெங்காயம் வந்து கொண்டுள்ளது. ஆனால் இந்தியா தடை விதித்துள்ளதால், ஈரான் ஏற்றுமதியாளர்கள் விலையை உயர்த்தி விடுவார்கள் என்றார்.

ஜலீல் டிரேடர்ஸ் நிறுவனத்தின் முகம்மது லாசீன் கூறுகையில், இந்திய வெங்காயம்தான் எமிரேட்ஸில் மிகவும் பிரபலமானது. அனைத்து நாட்டினரும் இந்திய வெங்காயத்தைத்தான் விரும்புவார்கள். தற்போது இந்திய அரசு விதித்துள்ள தடையால் இங்கு வெங்காய பற்றாக்குறையும், விலை உயர்வும் தவிர்க்க முடியாததாகி விட்டது என்றார்.

இந்தியாவின் பல பகுதிகளில் வெங்காய பற்றாக்குறை ஏற்பட்டதாலும், விலை உயர்வு அதிகரித்து வந்ததாலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தற்போது ஒரு டன் வெங்காயம் 500 டாலர் என்ற கட்டணத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் வெங்காயம் 445 டாலர்களுக்கும், கிரீஸ் வெங்காயம் 565 டாலர்களுக்கும், சிங்கப்பூர் வெங்காயம் 495 டாலர்களுக்கும், மலேசிய வெங்காயம் 470டாலர்களுக்கும், இலங்கை வெங்காயம் 480 டாலர்களுக்கும் ஏற்றுமதியாகிறது.

இன்னும் சில நாட்களில் இந்தியாவில் வெங்காய விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய உற்பத்தி அறுவடைக்குத் தயாராகி விட்டது. எனவே அதன் பின்னர் மறுபடியும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தட்ஸ் தமிழ்

5 comments:

said...

இந்த செய்தியில் இப்போதைய சமுதாய குறைபாடுகளின் பல கேள்விகளுக்கு பதில்கள் புதைந்து கிடக்கின்றன என சொல்லலாம்.

அவைகளை ஒரு தனி பதிவாக இடலாம். இப்போதைக்கு நேரமில்லை.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வித்யா கலைவாணி.

said...

வித்யா, வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கற்கலியே.
அங்கே ஏற்கனவே இருக்கிற வெங்காயம் ஒரு மாதிரிக் காரமா இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
இவ்வளவு வகை வெங்காயம் அங்கே கிடைக்கிறது என்று தெரியாது.
தகவலுக்கு நன்றி.
விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

said...

எங்ககிட்ட வெங்காயம் போடவே நிலம் இல்லை,எங்க வெங்காயத்தை 495 டாலர் (சிங்கை)கொடுத்து வாங்குகிறார்களா?
எங்கோ இடிக்குது.
ஆமாம்,இந்தியா ஏன் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது?

said...

சிங்கை என்பது ஒரு வியாபார ஏற்றுமதி தளம் தானே. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து சிங்கை முகவர்கள் மூலம் இது வருகிறது.
பாகிஸ்தானில் இருந்தும் வருகிறது.

said...

ஏற்றுமதிக்கு தடை இருப்பது சரிதான்.

இங்கயே இப்ப கிலோ 18 - 20 விக்குது