விருப்பப் பட்டியல் - வைரமுத்து

விருப்பப் பட்டியல் - வைரமுத்து

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
மின்சாரம் போகாத இரவு கேட்பேன்

தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்

நன்றி : http://gkpstar.googlepages.com/vairamithu2.html

4 comments:

said...

கதை, கவிதை, கட்டுரை என்று படித்து ரசித்து விட்டு எழுத உட்கார்ந்தால் பேனா நகர வில்லை. உடனே முடிவு எடுத்தேன். களவு செய்தாவது Blogspot நிரப்புவது என்று

இது என்ன கலாட்டா? - நாகூர் இஸ்மாயில்

said...

நல்ல கவிதை - ஆடையின்றிப் பிறந்த நாம் ஆசையின்றிப் பிறந்தோமா ? ஒருவரும் ஆசைப்படக் கூடாது என ஆசைப்பட்டவன் புத்தன்.

வைரமுத்துவின் வைர வரிகள் - விருப்பப் பட்டியல் பெரிதாக இருக்கிறது. அனைத்தும் கிடைக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம். களவாடுதல் - கலை(ள)வாணி எனத் தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்ள்ள வேண்டாம். படிக்கப் படிக்க நமக்கும் கவிதை எழுத வரும். கவலைப் பட வேண்டாம். படித்ததில் பிடித்தது எனச் சொல்லலாமே !!

said...

நன்றி இஸ்மாயில் மற்றும் சீனா சகோதரர்களுக்கு. மாற்றங்கள் வரும்.

said...

andha gkpstar nan than